PUBLISHED ON : மார் 23, 2021

வணக்கம்.
நான் ம.சவுமியா. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டத்துக்கு உட்பட்ட பி.எல். தண்டா என் கிராமம். அம்மா, அப்பாவுக்கு கேரளாவுல கூலி வேலை. ஆறு மாதத்துக்கு ஒரு தடவை வீட்டுக்கு வருவாங்க. அரசுப் பள்ளி மாணவியான நான் இப்போ தனியார் கல்லுாரியில மருத்துவம் படிக்கிறேன்.
மருத்துவர் ஆசை எதனால?
'எல்லாராலேயும் மதிக்கப்படணும்'னு விரும்பினேன்!
2020ல எத்தனை புத்தாடைகள் வாங்குனீங்க?
இரண்டு; அம்மா - அப்பாவுக்கு எதுவும் இல்லை!
எப்போதும் இருக்குற ஆசை?
அம்மாவோட அரவணைப்புல துாங்கணும்!
குடும்பத்தோட தியேட்டர்ல பார்த்த முதல் சினிமா?
அந்த பக்கமே நான் போனதில்லையே!
உங்களுக்காக ஒரு நாளில் செலவிடும் நேரம்?
உடல் சோர்வுல உறங்குற நேரம்!
'நீட்' தேர்வுல 184 மதிப்பெண் கிடைச்ச நேரத்துல, 'இன்னும் எத்தனை வருஷம்னாலும் படி; ஆனா, 'அரசு ஒதுக்கீட்டுல இடம் கிடைச்சிடுச்சுப்பான்னு என்னைக்கு சொல்றியோ, அன்னைக்குத் தான் நான் வீட்டுக்கு வருவேன்'னு அப்பா கேரளா போயிட்டார். 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலமா எனக்கு வாய்ப்பு கிடைச்சதும் அப்பா ஊருக்கு வந்துட்டு போனதுல ரொம்பவே சந்தோஷம்!
வலிகளை கடந்தவள்
நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டிருந்த நேரத்துல என் அக்காவுக்கு திருமணம் ஆச்சு. அவளுக்கு அப்புறம் நான்தான் இரண்டு தம்பிகளையும் கவனிச்சுக்கிறேன். தேர்வு நேரங்கள்ல, குடும்ப பாரம் எதுவுமில்லாம படிப்புல மட்டும் கவனம் செலுத்துற சக மாணவர்களை பார்க்குறப்போ பொறாமையா இருக்கும்; அம்மா - அப்பா மேல கோபமா வரும்; ஆனா, அவங்க காய்ப்பு கைகளை நினைக்குறப்போ அந்த கோபம் மொத்தமும் காணாமப் போயிடும்!
அது ஒரு காலம்
'சூரிய உதயத்திற்கு பின்னால் விழித்தது இல்லை; நிலா உச்சிக்கு வரும் முன் தலை சாய்த்ததும் இல்லை' எனச் சொல்லும் சவுமியா, தன் வாழ்வின் ரசனைக்குரிய காலமாக குறிப்பிடுவது பள்ளிக்காலத்தை!
அன்றைய நாட்களில்... காலை 6:00 மணி வரை படிப்பு. அதன்பின் சமையல்! தம்பிகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு இவரும் பள்ளிக்கு போக வேண்டும். அங்கு 'பள்ளி தலைவர்' பொறுப்புகளை கவனித்து மாலை வீடு திரும்பினால்... மறுபடியும் பம்பர வாழ்க்கை!
உங்கள் சந்தோஷத்தின் சாவி எங்கிருக்கிறது சவுமியா?
'நான் டாக்டராயிட்டேன்; நீங்க கூலி வேலைக்குப் போக வேண்டாம்'னு அம்மா, அப்பாகிட்டே சொல்றப்போ, அவங்க கண்கள்ல தெரியுற இளைப்பாறுதல் தான் எனக்கான சந்தோஷம்; அந்த நாள்தான் நீங்க குறிப்பிட்ட சாவி.
