PUBLISHED ON : மே 29, 2022

பெரிய பற்சக்கரங்கள் முதல் சிறிய திருகாணிகள் வரை தரமாக இருந்தால்தான் இயந்திரம் சரிவர இயங்கும்; ஈரோடு, தந்தை பெரியார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எனும் இயந்திரத்தை இயங்க வைப்பதில் மூத்த செவிலியான, 53 வயது ரா. சகிலா மகேஸ்வரனின் பங்கு முக்கியமானது.
பணி துவக்கம்: 1997ம் ஆண்டு
முதல் களம்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சென்னை.
பதவி: செவிலி
துறை அனுபவம்: 25 ஆண்டுகள்
திரைக்குப் பின்னால்...
நோயாளியின் உரிமை, பாதுகாப்பு, மருத்துவ கழிவுகள் மேலாண்மை, விழிப்புணர்வு பல கைகள்னு ஒரு மருத்துவமனையில நீங்க எதிர்கொள்ற எல்லா வசதிகளின் பின்னணியிலும், என்னை மாதிரியான 'தர உறுதி நிலைக்குழு' செவிலியரோட உழைப்பு இருக்கும்.
மருத்துவமனைகளுக்கான
தேசிய அங்கீகார வாரியம், தேசிய தர உறுதி நிலைகள் மற்றும் துாய்மை இந்தியா திட்ட வழிமுறைகளை மற்ற ஊழியர்களுக்கு விளக்கி, அதை சாத்தியப்படுத்துறதுதான் என் பணி!
ஒரு செவிலியானவர்...
நோயாளிகளுக்கு ஊசி போடுறதும், குளுக்கோஸ் மாத்துறதும் மட்டுமே செவிலியோட கடமை கிடையாது. செவிலியருக்குன்னு நிறைய சான்றிதழ் படிப்புகள் இருக்கு. அன்றாட பணிகளுக்கு மத்தியில அதை படிச்சதாலதான் என்னால தேசிய தர உறுதி நிலைக்குழு உறுப்பினராக முடிஞ்சது. துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கிட்டே இருக்குறதால, பிற மாவட்ட, மாநில மருத்துவமனைகளுக்கு நேர்ல போய் பயிற்சி வழங்குற வாய்ப்பு கிடைக்குது; அதன்மூலமா அனுபவம் பெருகுது!
வாழ்க்கை ஒருமுறையே
அது 2008ம் ஆண்டு; அன்னைக்கு மிதமான மழை; சாலையோரத்துல வசிக்கிற ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி; அக்கம் பக்கத்து கடைகள்ல பழைய துணிகளை வாங்கி மறைவு ஏற்படுத்தி பிரசவம் பார்த்தேன்; இரட்டை ஆண் குழந்தைகள்! அந்த தாய்... மனநிலை தவறியவள்; மருத்துவ பரிசோதனையில 'எய்ட்ஸ்' நோயாளின்னும் தெரிய வந்தது!
எது எதுக்காகவோ இந்த வாழ்க்கையை நாம குறை சொல்லி வாழ்றோம்; ஆனா, அந்த மூணு உயிர்கள் பூமி மேல அனுபவிக்கிறதுக்கு பெயர் என்னன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!
'கொரோனா' சொன்ன சேதி...
'சுனாமி' பாதிப்பு பகுதிகள்ல களப்பணி அனுபவம் எனக்குண்டு; அங்குள்ள மக்கள்ல யாருடைய தோள்ல நாம கை வைச்சாலும் உடனே தேம்பி அழ ஆரம்பிச்சிடுவாங்க! அதுக்கு நிகரான வலியை 'கொரோனா' தந்திருக்கு; பொது சமூகம் அந்த காயத்தை மறந்திடுச்சே தவிர, காயப்பட்டவங்க இன்னும் அழுதுட்டு தான் இருக்குறாங்க.
சுருக்:'இறப்புக்காக பிறக்கிறோம்'னு தெரிஞ்சும் இடைப்பட்ட காலத்துல நாம ஆடுற ஆட்டம் எதுக்காக?
