PUBLISHED ON : ஜூன் 05, 2022

உறங்கிக் கொண்டிருக்கிறது ஒரு மைக்; அதை தட்டி எழுப்புகிறீர்கள்; திடுக்கிட்டு எழும் அது, துாக்க கலக்கத்தில் என்ன கேட்கும்...
'இது குறித்த உங்கள் கருத்து என்ன?'
அவ்வளவுதான்; இப்படி கருத்து கேட்டும், கருத்து சொல்லியுமே காலம் தள்ளும் இச்சமூகத்தில் இருந்து விலகி, செயல்பாடுகளின் முக்கியத்துவம் உணர்த்துகிறார் மதுரை, உசிலம்பட்டியின் 37 வயது திருநங்கை ஊர்வசி காந்தி; மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகளுக்கான களப்பணிகள் காரணமாய், 'தேசிய கலாசார நிதியத்தின் ஆலோசகர்' பொறுப்பு வகிக்கிறார்.
ஊர்வசி காந்தி போராளியா?
அதை நீங்கதான் சொல்லணும்! என் உரிமைகளுக்காக அரசு துறைகள்ல நான் போராடின ஒரு தருணம்; நான் கொடுத்த மனுக்கள் மீதான நடவடிக்கை என்னன்னு தெரிஞ்சுக்க போறப்போ, என் உடைகளை பற்றி மட்டுமே ஒரு நபர் பேசுவார். 'உங்க பேர்ல யாரும் மனு கொடுக்கலையே'ன்னு அரசு அதிகாரிகள் பொய் சொல்லி விளையாடுவாங்க! இந்த சூழல்கள் எல்லாத்தையும் நான் போராடித்தான் கடந்திருக்கேன்.
அன்று, பாலின அறியாமையால் தன்னை கொல்ல நடந்த முயற்சியில் இருந்து தப்பி பிழைத்தவர், இன்று... 'பில்கேட்ஸ்' தம்பதியுடன் மாற்றுப்பாலினத்தவர் பிரச்னை தொடர்பாக உரையாடி இருக்கிறார். திருநங்கையர்களுக்கு குடும்ப சொத்தில் உரிமை பெற்று தருதல், திருநங்கையரின் சமய சடங்குகளை ஆவணமாக்குதல், கலாசார வழிபாட்டு தலங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரமாய் ஈடுபடுகிறார்.
வாழ்க்கை சிரமமானதா அல்லது நாம் சிக்கலாக்கி கொள்கிறோமா?
எல்லாருடைய வாழ்க்கையுமே போராட்ட களம்தான்! ஆனா, அதுல எப்படியாவது ஜெயிச்சாகணும்னு குறுக்கு வழியை தேர்வு செய்றப்போ தான் வாழ்க்கை சிக்கலாயிடுது! 'எவ்வளவு கடினமான சூழலா இருந்தாலும் நேர்வழி தான்'னு உறுதியா இருந்தா, நல்ல தீர்வும் கிடைக்கும்... அநாவசிய மனச்சுமைகளும் இருக்காது; இது என் அனுபவம்!
மாற்றுப்பாலினத்தவரின் எதிர்காலம்?
'கவுரவத்தை காப்பாற்ற உடன்பிறந்த மாற்றுப்பாலினத்தவரை கொல்லணும்'ங்கிற கொடூர மனநிலை 'படித்தவர், படிக்காதவர்' பேதமில்லாம ரெண்டு தரப்புலேயும் இருக்கு! மனிதர்களோட வாழ்க்கை தரத்தை உயர்த்தின அளவுக்கு மனிதாபிமானத்தை கல்வியறிவு உயர்த்தலை. ஒருவேளை... பள்ளி, கல்லுாரிகள்ல மாற்றுப்பாலினம் பற்றி போதிக்கப்பட்டால் எங்க எதிர்காலம் நல்லாயிருக்கும்!
இந்த அங்கீகாரத்துக்கு பிறகும் உங்க மனசு தேடுறது...
என் அம்மாவை; அவங்க உயிரோட இருந்திருந்தா என் கடந்தகால வாழ்க்கை அழகா, நிம்மதியா இருந்திருக்கும்.
ஊர்வசி காந்தியின் புதுப்புது அர்த்தங்கள்!
பாலினம்? - உணர்ச்சி
அன்பு? - உணவு
எதிர்ப்பு? - செயல்
