
காற்றில் படபடத்த நாளிதழ் மீது பேப் பர் வெயிட்டை வைத்தார் தமிழ் செல்வி. 'இதுல யாரோ ஒருத்தரோட நினைவஞ்சலி இருக்குமில்ல...!' - வருத்தம் தோய்ந்த குரலில் சொல் லிய சில வினாடிகளில் புன்னகைக்கு தாவி, 'சாரணை கீரையும், மோரும் சாப்பிடுறீங்களா' என்கிறார். இது தான் தஞ்சாவூர், ரெட்டிப்பாளையம் தமிழ்செல்வியின் ஆதார குணம்!
சின்ன வயசுல இருந்தே தமிழ் இப்படித்தானா?
ஆமா... இயல்பிலேயே எனக்கு கூச்ச சுபாவம் கிடையாது. தினசரி 100 தடவையாவது வாய்விட்டு சிரிச்சிருவேன். 'பொம்பள புள்ள இப்படி சத்தமா சிரிக்கக் கூடாது'ன்னு நிறைய பேர் சொல்லியிருக்காங்க. ஆனா, எனக்கு பிடிச்சமாதிரி நான் நானா இருக்குறேன்!
ஆங்கிலமும் கணக்கும் நன்றாக கைவரப் பெற்ற தமிழ்செல்வியால் பிளஸ் 2 வரை மட்டுமே படிக்க முடிந்தது. 16 வயதில் டெய்லரிங் பயின்று, 20 நிமிடத்தில் ஒரு பிளவுஸை தைத்து கொடுத்து ஐந்து ரூபாய் கூலியாக பெற்றிருக்கிறார்; 1989ல், 18 வயதில் திருமணம்; பின், வீட்டில் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்திருக்கிறார்.
தெரியாத விஷயங்களை எப்போ தெரிஞ்சுக்கிட்டீங்க?
என் கணவருக்கு 1998ம் ஆண்டு சாலை விபத்துல கால் முறிஞ்சு போனப்போ, இந்த சமூகத்தை நான் தனியா எதிர்கொள்ள வேண்டிய சூழல்; 'நமக்கு எதுவும் தெரியலை'ன்னு அப்போ உணர்ந்தேன்; அழுதேன்!
இன்று சணல் பொருட்கள் தயாரிக்கும் தொழில்முனைவோராக இருக்கும் தமிழ்செல்வி, அழகு கலை, தையல் கலை, சணல் பொருட்கள் தயாரிப்பு சார்ந்து பெண்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதுடன், பலருக்கு வேலைவாய்ப்பும் வழங்குகிறார்.
உங்க அனுபவத்துல பெண்ணின் பலம்?
பணத்தேவைக்கு யாரையும் சார்ந்திருக்காம பெண்கள் வாழணும். 2016ம் ஆண்டு என் அப்பாவுக்கு திடீர்னு ஒரு மருத்துவ செலவு வந்தப்போ கணவரையோ, மகன்களையோ எதிர்பார்க்காம உதவி பண்ணினேன். பெண்கள் ஏதாவது ஒரு பணியில இருக்குறது ரொம்ப முக்கியம்னு அப்போ உணர்ந்தேன்.
தமிழ்செல்வியின் கணவர் ஆனந்தன், 2006ம் ஆண்டு பக்கவாதம் தாக்கியதில் ஞாபகங்களை தொலைத்து விட்டார். அச்சமயத்தில், கிடைத்த ஆர்டர்கள் எதையும் இழந்துவிடாமல் தொழிலை காத்து நின்றிருக்கிறார் இவர். கூடவே, திருமண வீடியோ, புகைப்படங்களை காண்பித்து கணவர் தொலைத்த ஞாபகங்களையும் மீட்டிருக்கிறார்.
வாழ்க்கை இலகுவா கழிய என்ன செய்யணும்?
சுமைகளை கழற்றிவிட தெரிஞ்சிருக்கணும். 2011 - 19 வரைக்கும் என் மாமியார், மாமனார், பெற்றோர், கணவர்னு அடுத்தடுத்து இழப்புகள். கணவரோட இறப்பு மனரீதியா என்னைப் புரட்டிப் போட்டிருச்சு. ப்ப்ச்ச்ச்... இதெல்லாம் கடந்து வாழ்ந்துதானே ஆகணும்; சுமைகளை கழற்றிவிட கத்துக்கிட்டேன்.