
'ஆகாயம் காணாத மேகம் ஏது கண்ணே... நிலாவே வா...' என கணவர் சோமசுந்தரம் பாடத் துவங்குகிறார். தன்னிலை மறந்து ரசிக்கிறார் மனைவி சீதாலட்சுமி.
சேலம் சின்னபுதுாரில் உள்ள இவர்களது வீட்டை 'இசை நுாலகம்' எனலாம். 3,000ற்கும் மேற்பட்ட இசைத்தட்டுகள், 1,000ற்கும் அதிகமான ஒலிநாடாக்கள் மற்றும் குறுந்தகடுகள், நுாற்றுக்கணக்கான சினிமா பாட்டுப் புத்தகங்கள் என தேடித்தேடி சேகரித்து வைத்திருக்கும் சோமசுந்தரம், நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்!
ஆதரவாய் சாய்ந்துவிட்டால் ஆரிரரோ பாடு...
அவர் வாழ்க்கைக்குள்ளே 1995ல் நான் நுழையுறதுக்கு முன்னாடியே திரையிசை பாடல்கள் நுழைஞ்சிருச்சு. கல்லுாரி நாட்கள்ல பல மேடைகள்ல பாடியிருக்கார். அரசுப்பணி நிரந்தரம் ஆகுறவரைக்கும் கச்சேரிகள் மூலமா கிடைக்கிற வருமானத்துலதான் குடும்பம் நடத்தினோம்!
வாழ்க்கையோட பெரும்பகுதியை சினிமா பாடல்களோடு அவர் செலவிட்டிருந்தாலும், 'நான் முக்கியமா... கச்சேரிகள் முக்கியமா'ன்னு நான் கேட்குற அளவுக்கு அவர் நடந்துக்கிட்டது இல்லை!
தன்னை மறந்து மண்ணில் விழுந்த...
'ஒரு பாடலை ரசிக்கணும்னா வேலைகளுக்கு நடுவுல அதை கேட்கக்கூடாது; தனியா நேரம் ஒதுக்கணும்'னு அவர் சொன்னதுக்கு அப்புறம்தான் இசையோட உண்மையான ருசியே எனக்குப் புரிஞ்சது! அதுக்கப்புறம் எஸ்.பி.பி., எஸ்.ஜானகி, சித்ரா எல்லாம் என் பக்கத்துல இருந்து எனக்காகவே பாடுறதா தோணுது! என்னைப் பொறுத்தவரைக்கும் திரையிசைப் பாடல்கள் தியானத்தின் மறுவடிவம்; என் கணவர்... என் தியான குரு!
உன்னோடுதான் என் ஜீவன்...
'திரையிசைத் தட்டுகளை சேகரிக்கப் போறேன்'னு 2018ம் ஆண்டுல ஒருநாள் சொன்னார். 'செல்போன்ல பாட்டு கேட்டுட்டு இருக்குற இந்தகாலத்துல அதை சேகரிச்சு வீட்டை அடைக்கணுமா'ன்னு எனக்குள்ளே ஒரு கேள்வி; ஆனாலும், 'வேண்டாம்'னு தடுக்க நியாயமான காரணங்கள் என்கிட்டே இல்லை. பணி ஓய்வுக்கு அப்புறமும் அவர் மனசு இன்னும் தன்னை இளமையா உணர காரணம்... இந்த தேடல்தான்! அதான், அதுக்கு துணையா நிற்கிறேன்!
உங்க திரையிசை மோகம் வற்றவே வற்றாதா சோமசுந்தரம்?
தமிழ் மட்டுமில்லாம தெலுங்கு, ஹிந்தி, ஆங்கில திரையிசை தட்டுகளும் என்கிட்டே இருக்கு. இதையெல்லாம் இயக்குற நான்கு விதமான கருவிகளும் என்கிட்டே இருக்கு. ஆனாலும், இது போதாது. திரையிசை சார்ந்த எல்லா படைப்புகளையும் சேகரிச்சு என் வீட்டை நிறைக்கணும். திரையிசையில நிகழும் மாற்றங்களை முழுமையா நான் உணரணும். இந்த தேடல் என்னோட முடிஞ்சிடாது; என் மகனும் தொடர்வான்.