PUBLISHED ON : ஜூன் 09, 2020

செங்கல்பட்டு - ஊரப்பாக்கத்தில் வசிக்கும் கணேஷ்குமார், இச்சமூகத்திற்கு 33 வயது நபர்; ஆனால், சாரதா தேவிக்கு மட்டும் மூன்று வயது குழந்தை. 62 வயதுடைய ஒருவரால், 33 வயது நபரை மூன்று வயது குழந்தையாக பேண முடிகிறது எனில், அந்த ஒருவர் தாயாகத்தானே இருக்க முடியும்; அப்படியான தாய், சாரதா தேவி; மகன் கணேஷ் குமார்.
அம்மாக்களால் மட்டுமே இந்த அன்பு சாத்தியம்; இல்லையா?
'ஆமா'ன்னு சொல்லி இதுக்கான பெருமையை எடுத்துக்கிறதுக்கு முன்னாடி, சில விஷயங்களை நான் சொல்லியாகணும். என் மகனால நல்லா நடக்க முடியாது; சராசரி குழந்தைகள் மாதிரி சிந்திக்க முடியாதுன்னு தெரிஞ்சதும், இந்த வாழ்க்கையை நான் சாபமா நினைச்சேன். புரிதல் இல்லாம என் விரக்தி, கோபத்தை அவன் மேல காட்டினேன்.
அவனோட 11 வயசுலதான், எனக்கு இதைப்பத்தின விழிப்புணர்வு கிடைச்சது. அந்த நிமிஷத்துல இருந்து, எனக்கு அவன் மூணு வயசு குழந்தை ஆயிட்டான்!
உங்களுக்கு பக்கபலமா யாருமே இல்லையா?
இப்படி பிறந்துட்டானேன்னு எனக்கு கஷ்டமா இருந்தாலும், எந்த சூழல்லேயும் நான் அவனை வெறுக்கலை. ஆனா, என் வாழ்க்கைத் துணை என்னை மாதிரி நடந்துக்கலை. இதனால, தனி மனுஷியா கணேஷை வளர்க்க வேண்டியிருந்தது. சிறப்பு குழந்தைகள் பராமரிப்புக்கான பயிற்சியை முடிச்சு, ஒரு சிறப்பு பள்ளியில வேலைக்கு சேர்ந்தேன். அந்த வருமானத்துலதான் அவனை வளர்த்தேன்.
குழந்தை வளர்ப்பு தந்த சவால்கள்?
கணேஷோட 15 - 25 வயசு வரைக்குமான காலகட்டம், எனக்கு ரொம்பவே சவாலா இருந்தது. அவனுக்கு அப்போ நிறைய கோபம் வரும். திடீர்னு என் தலைமுடியை பிடிச்சு இழுப்பான்.
சலுான்ல அவனுக்கு முடி வெட்டி கூட்டிட்டு வர்றது பெரும்பாடு; சில கடைகள்ல, 'லேட் ஆகும்'னு சொல்லியே எங்களை தவிர்த்திடுவாங்க; இப்படி நிறைய!
எதிர்காலம்?
மத்திய அரசோட 'சிப்டா' திட்டம் மூலமா கீ செயின், காபி மக், டீ சர்ட் மேல புகைப்படங்களை அச்சிட்டு தர்ற தொழில் பயிற்சியை கணேஷும் நானும் எடுத்துக்கிட்டோம். இந்த தொழில்ல வர்ற வருமானம்தான், எங்க எதிர்கால சேமிப்பு. இப்போதைக்கு மகளும், மருமகனும் எங்களை நல்லா பார்த்துக்கிறதால சிரமம் இல்லை!
கடந்த டிசம்பர் மாதம், பல குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளிகள் பிரிவின்கீழ், சிறந்த சுயதொழிலாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதை பெற்றுள்ளார் கணேஷ் குமார்.
கணேஷ் விருது வாங்குறப்போ சாரதா அம்மாவோட உணர்வு?
கடந்து வந்த 33 ஆண்டு கால வாழ்க்கை கண்ணு முன்னால வந்துட்டு போச்சு; அவ்வளவுதான்.
