தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/நங்கையர் திலகம்!

நங்கையர் திலகம்!

நங்கையர் திலகம்!


PUBLISHED ON : ஜூலை 05, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 05, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி, மண்ணச்சநல்லுார் அருகே உள்ள திருப்பைஞ்சீலிதான் செல்லம்மாளின் ஊர். 'ஆண்கள் சூழ்ந்த மோட்டார் தொழிலில் ஓட்டுநராக தனித்து ஜெயித்த பெண்' எனும் வழக்கமான கதையாக இவரது வாழ்வு தெரிந்தாலும், வாழ்வின் மேடு பள்ளங்களை சமப்படுத்தி புரிந்து கொள்ளும் பக்குவமே இவரது தனித்துவம்.

உங்களை, 'சபாஷ்... செல்லம்மா'னு வாழ்த்தலாமா?

'பெண் லாரி ஓட்டுநர்'ங்கிறதால தனியா தெரியுறேன். இதுவே நானொரு பூக்கடைக்காரம்மாவா இருந்திருந்தா உங்களுக்கு தெரிஞ்சிருக்க மாட்டேன். நான் செய்ற தொழிலைத் தவிர எனக்கும் மற்ற பெண்களுக்கும் வேறெந்த வித்தியாசமும் இல்லாதப்போ, எனக்குஎதுக்கு பாராட்டு?

அப்போ... உங்களைப் பற்றி உங்க பார்வை?

சித்தாள் வேலைக்குப் போய் சம்பாதிச்சுதான் பிளஸ் 2 படிச்சேன். 18 வயசுலேயே குமரனை காதலிச்சு வீட்டுல உள்ளவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டேன்; ரெண்டு பசங்க இருக்காங்க. லாரி ஓட்டுநரான என் கணவர் தந்த வருமானத்துல சிரமப்பட்டு குடும்பம் நடத்திட்டு இருந்த நேரம். ஒருநாள் அவரோட வருமானத்தைப் பற்றி பேச வேண்டிய சூழல். நான் கணக்கு விபரம் கேட்க, அவருக்கு கோபம் வர, 'தொழிலை பண்ணிப் பாரு; அப்போதான் அதுல இருக்குற சிரமம் புரியும்'னு அவர் சொல்ல, 'சரிங்க'ன்னு 2018ல நானும் அவர்கூட ஸ்டியரிங் பிடிக்க வந்துட்டேன்.

அவருக்கு, 'ஈகோ' எழும்பலையா?

அவருக்கு மது அருந்துற பழக்கம் உண்டு. ஆனா, லாரி ஏறிட்டா குடிக்க மாட்டார். சம்பாதிக்கிற பணம் வீணா போகுதுன்னுதான் எங்களுக்குள்ளே சண்டையே வரும். 'கொரோனா' ஊரடங்கு நேரத்துல, 'டாஸ்மாக்' திறந்ததால மறுபடியும் எங்களுக்குள்ளே சண்டை. இது ஒருபக்கம் இருந்தாலும், எங்களுக்குள்ளே 'ஈகோ' மட்டும் எப்பவுமே கிடையாது. அடுத்தவங்க மத்தியில என்னைக்கும் அவர் என்னை விட்டுக் கொடுத்தது இல்லை.

'பெண்' - அடங்கித்தான் போயாகணுமா?

அப்படி நான் நினைக்கலை. என் வாழ்க்கையில நான் அடங்கிப் போகலை; விட்டுப் பிடிக்கிறேன்... அவ்வளவுதான்!

ஆனா, சகிச்சுட்டு வாழ்றது அடிமைத்தனம் ஆயிடாதா?

வார்த்தைக்கு வேணுமின்னா நீங்க சொல்றது ஏத்துக்க கூடியதா இருக்கலாம்; ஆனா, வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது. ஆணும், பெண்ணும் சேர்ந்து ஜெயிக்கிறதுதான் வாழ்க்கை.

லாரி ஓட்டுநராக சந்திக்கும் பெரும் சவால்?

தொழிலுக்காக போற இடங்கள்ல சுகாதாரமான கழிப்பிட வசதி இருக்காது; இதுதான் பெரிய அவஸ்தை. மத்தபடி மேடு, பள்ளம், குழி இதெல்லாம் எனக்கொரு விஷயமே இல்லை!

சபாஷ் செல்லம்மா!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us