PUBLISHED ON : அக் 31, 2021

கடவுள் குறித்த நம்பிக்கைகளில் மனிதர்களுக்கிடையே மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும், 'மனம்தான்/ மனிதன்தான் கடவுள்' என்பதை எந்நம்பிக்கை கொண்டோராலும் மறுத்துவிட முடியாது. அப்படியான 'கடவுள் மனம்' முல்லை டீச்சருக்கு!
தன் துரிதமான நடவடிக்கையால் பெரும் விபத்தில் இருந்து மாணவர்களை காப்பாற்றியவர் இவர். 'உங்க மனசு யாருக்கும் வராது; நீங்கதான் என் குலசாமி!' - உயிர் பிழைத்த மாணவர்களின் பெற்றோர் டீச்சருக்கு சொல்லும் நன்றி இது!
காயங்கள்ல இருந்து மீண்டு வந்துட்டீங்களா டீச்சர்?
தீ விபத்துல இருந்து 26 மாணவர்களை காப்பாற்றின திருப்தியில மனசை மீட்டுட்டேன்; உடம்புதான் இன்னும் பழைய நிலைக்கு வரலை! இடுப்பு, கால்கள்ல 8 அறுவை சிகிச்சை நடந்திருக்கு! ஓய்வெடுக்க விரும்பாத என்னால இப்போ தொடர்ச்சியா நிற்கக்கூட முடியலை! ஆனாலும், இந்த வலி என்னை எதுவும் செய்யாதுங்கிற பெரும் நம்பிக்கை இருக்கு!
ஜனவரி 29, 2020; ராணிப்பேட்டை மாவட்டம், புலிவலம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம்; 26 மாணவ மாணவியருடன் பள்ளி சுவர் அருகில் அமர்ந்திருந்த முல்லை டீச்சர், சுவருக்கு மறுபுறம் எரிவாயு கசிவதை உணர்ந்து, அடுத்த சில நொடிகளில் மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு தானும் நகர முயன்றிருக்கிறார். அதற்குள் 'சிலிண்டர்' வெடித்து இவர் மேல் சுவர் சாய்கிறது.
வாழ்க்கை நரகமாயிருச்சுல்ல முல்லை?
'நரகம்'னு சொல்லிட முடியாது; ஆனா, சிரமமாயிருச்சு! ஒருவேளை... நான் பிழைச்சு என் பிள்ளைகள் யாருக்கும் காயம் ஏற்பட்டிருந்தா, என் மனசே தினம் தினம் என்னை சாகடிச்சிருக்கும்.
'படைப்பதும், பாதுகாப்பதும் பெண்ணின் குணம்'னு நிரூபிக்க கடவுள் எனக்குத் தந்த வாய்ப்பாதான் இந்த விபத்தை நினைக்கிறேன்!
சுயநலம் ஆபத்தானதா?
இல்லை... சூழ்நிலையைப் பொறுத்து அது அழகானது! 'எனக்கானது'ன்னு நினைக்கிறது சுயநலம்னா எல்லா பெண்களுமே சுயநலக்காரர்கள்தான்! 'என் குடும்பம்... என் பிள்ளைகள்'னு வாழ்றதுலதான் பெண்களுக்கு சந்தோஷம்! ஒரு ஆசிரியையா சொல்றேன்... என்னால காப்பாற்றப்பட்ட அந்த 26 மாணவர்களும் என் பிள்ளைகள்தான்!
தொடர் சிகிச்சையில் இருக்கும் ஆசிரியை பா.முல்லைக்கு, வீர தீர செயலுக்கான 'அண்ணா பதக்கம்' வழங்கி கவுரவித்திருக்கிறது தமிழக அரசு. தற்போது பள்ளி செல்லத் துவங்கி இருக்கிறார் முல்லை டீச்சர்.
உங்கள் வலிகளுக்கான மருந்து?
'உன் காயத்திற்கான மருந்து உன் மாணவர்கள்தான்! வலி வரும்போது அவர்களை நினை; வாழ்க்கை வெறுக்காது'ன்னு தைரியம் சொன்ன கணவர் இப்போ இல்லை; 'கொரோனா'வுக்கு அவரை பறிகொடுத்துட்டேன். காலம் என்னை சோதிச்சுப் பார்க்குது; மனவலிமையோட எதிர்த்து போராடிட்டு இருக்குறேன்.
