PUBLISHED ON : நவ 07, 2021

ஐந்தில் வளையாததை தங்களது 36, 49 மற்றும் 50 வயதில் வளைத்துக் காட்டியிருக்கின்றனர் மல்லிகா, லட்சுமி மற்றும் தமிழரசி; ஆம்... இந்த வயதில் பள்ளிக்குப் போய் கல்விச் செல்வம் பெற்றிருக்கின்றனர். இதிலென்ன அதிசயம்?
திருச்சி, மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள தாயனுார் கிராமத்தைச் சேர்ந்த இவர்களின் வாழ்வுதான் இக்கேள்விக்கான பதில்!
மல்லிகாவும் கல்வியும் 'பொம்பள புள்ள படிச்சு என்ன பண்ணப் போகுது'ங்கிற எண்ணத்தால பள்ளிக்கூட வாசமே அறியாம போன பெண்கள்ல நானும் ஒருத்தி. தினமும் காலையில 4:00 மணிக்கெல்லாம் கிளம்பி கூடையில காய்கறி நிரப்பிட்டு வீடு வீடா போய் விற்பனை பண்றதுதான் என் தொழில்.
காய்கறி விற்பனை ஆகாத சமயங்கள்ல கூடை சுமக்குறப்போ, 'இப்படி படிக்காம போயிட்டியே மல்லிகா'ன்னு மனசுல ஒரு பாரம் கூடும்!
'100 சதவீத எழுத்தறிவு இயக்கம்' மூலமா எங்க ஊர் அரசுப் பள்ளியில எழுத, படிக்க கற்றுத் தர்றதை கேள்விப்பட்டு அதுல சேர்ந்தேன். இந்த படிப்பை வைச்சு என்ன பண்ண முடியும்னு தெரியலை; ஆனா, இந்த வயசுலேயும் என்னால கத்துக்க முடியும்ங்கிறது எனக்கு நம்பிக்கையா இருக்கு!
லட்சுமியும் கல்வியும் நினைவு தெரிஞ்ச வயசுல இருந்தே காட்டு வேலைதான் என் அன்றாடம். களைக் கொத்து, மண்வெட்டிக்கு அடுத்து அதிக நேரம் என் கையில இருந்தது சமையல் கரண்டி. திடீர்னு கல்யாணம் பண்ணி வைச்சு அனுப்பிட்டாங்க. அவருக்கு குடிப்பழக்கம் புற்றுநோய்னு ரெண்டு பெரிய பிரச்னை; கடன் வாங்கி சிகிச்சை தந்தும் காப்பாத்த முடியலை. அந்த கடனை அடைக்கிறதுக்காக கிடைக்கிற வேலைகளை செய்றேன். இப்பகூட நான் எழுதவும், படிக்கவும் கத்துக்கிட்ட தாயனுார் பள்ளிக்கூடத்துலதான் துப்புரவு வேலை பார்க்குறேன். அவர் இருந்திருந்தா படிக்க விட்டிருப்பாரான்னு தெரியலை; ஆனா, இன்னைக்கு என் பேரை கையெழுத்தா போடும்போது சந்தோஷமா இருக்கு!
தமிழரசியும் கல்வியும் தென்னங்கீற்று பின்னி, பாத்திரம் கழுவிதான் என் நாலு பொண்ணு, ஒரு பையனை படிக்க வைச்சேன். 'படிக்கணும்'ங்கிறது எனக்கு நிறைவேறாத கனவு; அதனாலேயே என் பிள்ளைகளை பி.காம்., நர்சிங், பி.எஸ்சி.,ன்னு மேற்படிப்பு வரை படிக்க வைச்சேன். படிக்க ஆசையிருந்தும் என் வாழ்க்கை சூழலால பஸ் பலகையில இருக்குற ஊர் பேரைக் கூட என்னால படிக்க முடியலை; இப்போ, எந்த ஊருக்கு போறதா இருந்தாலும் பெயர் பலகை பார்த்து நானே போறேன்! மை தொட்டு கைரேகை வைக்கிறதில்லை!
'நாலு எழுத்து நமக்கு தெரியும்'ங்கிற எண்ணம் தனி தெம்புதான்.
ஆசைகள் 1000
'டாஸ்மாக்' இல்லா தமிழகம்
அறியாமை அற்ற தமிழகம்
மேம்பட்ட வாழ்க்கை
