தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!


PUBLISHED ON : நவ 14, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சி, உறையூர் காவல் நிலையம் அருகே, '2 ரூபாய் தோசை கடை' என்று காகிதத்தில் பெயரிடப்பட்ட காலண்டர் அட்டைதான் அந்த உணவகத்தின் பெயர் பலகை. இந்த எளிமை போலத்தான் உணவகம் நடத்தும் 43 வயது வெள்ளையம்மாளின் மனமும்; இந்த மனம் போலவே அவர் கணவர் சின்னத்தம்பி வார்க்கும் தோசை விலையும்!

கஷ்டப்பட்டு உழைக்கிறதே நிறை வாழ்வு வாழத்தானேம்மா?

ஒரு தோசையை 60 ரூபாய்க்கு விற்கிறவங்க எல்லாம் நிறை வாழ்க்கை வாழ்றாங்கன்னு உங்களால உத்தரவாதம் தர முடியுமா; என்னோட இந்த 2 ரூபாய் தோசை வியாபாரம் ஆடம்பர வாழ்க்கையை எனக்குத் தரலை; அதுல எனக்கு வருத்தமும் இல்லை; ஏன்னா, அது என் கனவு இல்லை. ஒவ்வொரு நாளும் நான் சம்பாதிக்கிறதுதான் அடுத்த நாள் வியாபாரத்திற்கான முதலீடு. கஷ்டப்பட்டு உழைக்கிறேன்; 'உழைக்கிறதுதான் வாழ்க்கை'ன்னு நம்புறேன்; 'இது போதும்'னு மனசு சொல்லுது.

'இலக்கு இல்லாத வாழ்க்கை' உப்பு இல்லாத உணவு ஆயிடாதா?

தினமும் சாயங்காலம் 6:00 மணிக்கு கடை திறந்தா, நள்ளிரவு தாண்டியும் ஜனங்க வர்றாங்க! இரவு 2:00 மணிக்கு துாங்கி காலையில 6:00 மணிக்கு எழுந்து பொழப்பை ஆரம்பிக்கணும். எப்ப பொழுது முளைக்குது; எப்படி சாயுதுன்னு உணர முடியாத பரபரப்பு வாழ்க்கை. என்னோட இலக்கு... விடியுற நாட்கள்தான்! அவங்கவங்க ருசிக்கு ஏத்தமாதிரி உப்போட அளவு மாறும் இல்லையா; இது... என் ருசிக்கான உப்பு!

மளிகை பொருட்களின் விலையேற்றம் வெள்ளையம்மாளின் குடும்பத்தை பாதித்திருக்கிறது என்றாலும் தோசை விலையில் மாற்றமில்லை. ஆதரவற்ற முதியவர்கள், நடைபாதைவாசிகள் என பெரும் கூட்டம் இந்த 2 ரூபாய் தோசையை நம்பியிருப்பதே இதற்கு காரணம்.

இந்த அடையாளத்தால் விளைந்த காரியங்கள்?

ஊரடங்கு தளர்வு நேரம்; கடை திறந்ததும் முகம் காட்ட விரும்பாத ஒருத்தர் கடைக்குத் தேவையான ஒருவார மளிகைப் பொருட்களை அனுப்பி வைச்சார்; அப்போ புரிஞ்சது என் பணிக்கான பலன்! தொடர்ந்து நிறைய விசேஷ ஆர்டர்கள் கிடைச்சது. இதையெல்லாம் விட பெருமையா சொல்லிக்க ஒரு விஷயம் உண்டுன்னா... எங்க கடை இருக்குற பகுதியில வாழ்ற யாரும் பட்டினியோட ஒருநாளும் துாங்கினது கிடையாது!

ரெண்டு பொண்ணுங்களுக்கும் என்ன சேர்த்து வைச்சிருக்கீங்க?

எதுவுமில்லை; கடன் வாங்கித்தான் அவங்களுக்கான நல்ல காரியங்களைச் செய்யணும். நிச்சயம் ஏதாவது நடந்து அந்த சூழலை நல்ல முறையில கடந்துடுவோம்.

அந்த 'ஏதாவது'ங்கிறது எது?

சாமி, மனுஷங்க, தன்னம்பிக்கை, உழைப்பு, இந்த பேட்டி... ஏதாவது ஒண்ணு கை கொடுக்கும்.

வெள்ளையம்மாளின் புதுப்புது அர்த்தங்கள்!

வாழ்க்கை? - மனசு

உணவு? - கருணை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us