PUBLISHED ON : அக் 19, 2020

மாதவி லதா; மாற்றுத்திறனாளி - பதக்கங்கள் பல வென்ற நீச்சல் மற்றும் சக்கர நாற்காலி கூடைப்பந்து வீராங்கனை - தமிழக பாராலிம்பிக் தமிழக நீச்சல் கூட்டமைப்பின் நிறுவனர் - இந்திய சக்கர நாற்காலி கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவர்.
விளையாட்டு திறமையால் உயர விரும்பும் மாற்றுத்திறனாளிகள் எத்திசையில் இருப்பினும், சென்னையில் இருந்தபடியே மாதவியின் கரம் அவர்களுக்காக நீளும். கடலின் இரு துளியாய், மாதவி லதாவின் கரம் பிடித்து மேலெழுந்த இருவரின் அனுபவ பகிர்வு இது.
வேல்முருகன் கள்ளக்குறிச்சி
ஏழாவது படிக்கிறப்போ ஒரு விபத்துல வலதுகால்ல பாதிப்பு. அரசு வேலைக்கு போனாத்தான் எதிர்காலம்னு முடிவு பண்ணி, சென்னைக்கு படிக்க வந்தேன். நாளிதழ்ல நீச்சல் போட்டிக்கான அறிவிப்பை பார்த்தேன்; போன இடத்துலதான், மாதவி மேடம் எனக்கு அறிமுகம்ஆனாங்க!
கிணற்றுல நீச்சல் பழகியிருந்த என்னால, விதிமுறைகளுக்கு உட்பட்டு நீச்சல் குளத்துல நீந்த முடியலை. மேடம் மூலமா திண்டுக்கல் பயிற்சியாளரோட அறிமுகம் கிடைச்சது. அவங்க செலவுல, ஒவ்வொரு வார கடைசியிலேயும் சென்னையில இருந்து திண்டுக்கல்லுக்குப் போய் பயிற்சி எடுத்துட்டு வருவேன். அந்த பயிற்சிகள்தான், சர்வதேச போட்டிகள்ல பதக்கங்கள் ஜெயிக்க காரணமா இருந்தது.
மாதவியால்...
* இப்போ நான், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நீச்சல் பயிற்சியாளர்.
* என் சம்பாத்தியத்துல, 14 லட்சம் ரூபாய் செலவு பண்ணி வீடு கட்டியிருக்கேன்; தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துல தேர்வாகி பணி ஆணைக்காக காத்திருக்கிறேன்.
மாலதி ராஜா சென்னை
பிறந்ததுல இருந்தே சக்கர நாற்காலிதான் என் துணை. 'சுயமா வாழ முடியாதோ'ங்கிற எண்ணம். மாதவி அக்கா பேச்சு தந்த உத்வேகத்துல, சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட ஆரம்பிச்சேன்.
தேசிய போட்டிகள்ல பதக்கங்கள் கிடைச்சது. என்னைப் பெத்தவங்களை என் வருமானத்துல காப்பாத்துறேன். தொடருக்காக ஸ்பான்சர் பிடிக்க அக்கா அலையுறப்போ, 'மாற்றுத்திறனாளிக்கு எதுக்கு விளையாட்டு; வேணுமின்னா பெட்டிக்கடை வைச்சு தர்றோம்'னு சிலர் முகத்துக்கு நேரா சொல்வாங்க; ஆனாலும், மனசு சோர்ந்துடாம அக்கா அடுத்த கதவை தட்டுவாங்க!
மாதவிக்கு...
* போக்குவரத்து, தங்குமிடம், மைதான கழிப்பறைன்னு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை நிறைவேத்துறதுல பல சவால்கள் இருக்கு.
* இந்த மலையை சுமக்குற பொறுப்பும், அது தர்ற மன அழுத்தமும் அக்காவுக்கு நிரந்தரமாயிடுச்சு.
நன்றியும், வணக்கங்களும் மாதவி லதா.
