PUBLISHED ON : டிச 19, 2021

மாரியம்மாளின் குரல் ஒலித்து முடிப்பதற்குள், 'ஆமா...' போட்டு விடுகிறார் முத்துக்குமார்.
என்னங்க இது...?
என்ன... என் மனைவி வில்லடிச்சுப் பாட, நான் குடம் அடிச்சு 'ஆமா... ஆமா...'ன்னு பாடினாத்தானே கூட்டம் வில்லுப்பாட்டை ரசிக்கும்!
தென்காசி, வடக்கு அழகு நாச்சியார்புரத்தைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர்கள் முத்துக்குமார் - மாரியம்மாள் தம்பதி. இரு பிள்ளைகளுக்கு பெற்றோரான இவர்கள், தமிழகத்தின் பல மாவட்டங்களில் வில்லுப்பாட்டு இசைக்கின்றனர்.
என்ன இருந்தாலும் ஒரு ஆண் 'ஆமா...' போடுறதுல...
அந்த 'ஆண்' கர்வம்... இல்ல... இல்ல... அந்த 'வீண்' கர்வத்தை துாக்கியெறிஞ்சு 20 ஆண்டுகள் ஆயிருச்சு. மாரியம்மா என் முறைப்பொண்ணு. ஏழாவது வகுப்பை அவ தாண்டலை. மாமா இறக்குறதுக்கு முன்னால இவ கையைப் பிடிச்சு, 'எந்த சூழல்லேயும் வில்லுப்பாட்டை மட்டும் விட்றாதே'ன்னு சொல்லிட்டார். நானோ, 'வீட்டோட இருந்தாத்தான் இவளை கட்டிப்பேன்'னு பிடிவாதமா நின்னேன். காலச்சூழல் அவளை 'சம்மதம்' சொல்ல வைச்சது!
ஆனா, குடும்ப பொருளாதாரம் அவளை விவசாய வேலைகள் உட்பட பல வேலைகள் பக்கம் தள்ளுச்சு; தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்குப் போய் கையில பெரும் தீக்காயத்தோட அவ திரும்பின அந்த ராத்திரி, என் மனசாட்சிக்கு என்னால பதில் சொல்ல முடியலை; 'உனக்கு பிடிச்ச வில்லுப்பாட்டையே பாடும்மா'ன்னு சொல்லிட்டேன்; 'நீங்க கூட இருக்கணும்'னு அவ சொன்னா; மளிகை கடையில வேலை பார்த்தவன் மேடை ஏறிட்டேன்!
பொருளாதாரத்துக்கு மனைவியை சார்ந்திருக்கிறது...?
இருந்தா என்ன; இதை நான் பெருமையா உணர்றேன்! வில்லுப்பாட்டு கச்சேரிகளுக்கான தொகையை அவதான் வாங்குவா!
'பாடுறவங்களுக்கு ரெட்டை கூலி'ங்கிறதால தனக்கு ரெட்டை கூலி எடுத்துக்குவா! திடீர்னு ஒருநாள், கடனுக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்து என்னை ஓட்ட வைச்சா!
இப்போ, குழுவை கார்ல அழைச்சிட்டுப் போறதுக்கான கூலியையும் சேர்த்து நானும் ரெட்டை கூலி வாங்குறேன்!
அப்பா சொல்லி முடிச்சிட்டார்; நீங்க...?
மகன்: கச்சேரி முடிச்சு வந்தாலும் மனசும் உடலும் சோர்வாகி நிற்கிற அம்மாவை நான் பார்த்ததில்லை!
மகள்: என் டீச்சர் தீர்த்து வைக்காத மகாபாரத சந்தேகத்தை எங்க அம்மா தீர்த்து வைச்ச அந்த நாள்... ஆயுசுக்கும் மறக்காது!
சொல்லுங்க மாரி... 'வாழ்வின் பலம்' எது?
'காலம் விளையாடுது; அவர் சம்மதத்தோட நிச்சயம் நான் வில்லுப்பாட்டு பாடுவேன்'னு பெருசா நம்பினேன். அவர் புரிஞ்சுக்கிட்டார். இப்போ அவரை பக்கத்துல வைச்சுக்கிட்டே பாடுறேன். இந்த மாற்றம் தந்த 'நம்பிக்கை'தான் வாழ்க்கையோட பலம்.
