PUBLISHED ON : நவ 20, 2022

'கண்ணம்மா' பகுதியில் 2017 நவம்பர் 12ம் தேதி, மதுவுக்கு அடிமையான கணவருடனான பிரச்னையில் தீக்குளித்து உயிர்பிழைத்த பரிமளா, தன் வாழ்வை வெற்றிகரமாக மீட்டெ டுத்த விதம் பற்றி விவரித்திருந்தார்.
அதேபோன்ற பிரச்னையில், 2014ல் கணவர் நாகராஜ் கண்ணெதிரே தீயிட்டுக் கொண்டார் திருப்பூர், அனுப்பர்பாளையம் ஷர்மிளா. ஆனால், பரிமளாவுக்கு கொடுத்த வாய்ப்பை ஷர்மிளாவுக்கு காலம் வழங்காதது துயரம்!
'ஷர்மிளா'ன்னு சொன்னதும் என்ன நினைவுக்கு வருது நாகராஜ்?
அன்னைக்கு தை 7ம் தேதி; அவளோட பிறந்தநாள்; அதுகூட அப்போ எனக்கு ஞாபகம் இல்லை. சிலிண்டருக்குன்னு அவ கடன் வாங்கி வைச்சிருந்த பணத்துல குடிச்சிட்டு வந்து படுத்துட்டேன். லேசா முழிப்பு தட்டினப்போ...
'பத்த வைச்சுக்குவா'ன்னு ரவுத்திரமா என் முன்னாடி நிற்கிறா; மண்ணெண்ணெயில முந்தானை நனைஞ்சிருந்தது! ஒரு நொடிதான்... தீக்குச்சியை அவ உரச பத்திக்கிச்சு; தள்ளாடிக்கிட்டே காப்பாத்த போனேன்; 'குழந்தைகளை நீ பார்த்துக்கோ'ன்னு சொல்லி என்னை தள்ளி விட்டுட்டா! மயக்கம் தெளிஞ்சு நான் முழிச்சப்போ தீக்காயத்தோட மருத்துவமனையில கிடந்தேன். மூணு மாசம் கழிச்சுதான், 'அவ இல்லை'ங்கிற விஷயத்தையே எனக்குச் சொன்னாங்க!
அன்று... நாகராஜின் முகம், கை விரல்கள், தொடைப் பகுதிகள் தீயினால் வெந்து கோரமாயின! இன்று... கையுறை அணிந்தாக வேண்டிய கட்டாயத்தால் எந்த வேலைக்கும் அவரால் செல்ல இயலவில்லை. பள்ளி செல்லும் இரண்டு மகள், மகனை ஷர்மிளாவின் தாயார் பராமரிக்க, எடுபிடி வேலைகள் மூலம் பசியாறி கோவில்களில் தங்கிக் கொள்கிறார் நாகராஜ்.
இன்னும் மிச்சமிருக்கிற ஞாபகங்கள்?
கோவில் திருவிழாவுல ஷர்மிளா ரொம்ப அழகா கோலாட்டம் ஆடுவா. அதைப்பார்த்து தான் அவளை காதலிச்சேன். ப்ப்ச்ச்ச்... இந்த குடிப்பழக்கம் இல்லாம இருந்திருந்தா சந்தோஷமா இருந்திருப்பேன்! தயவுசெய்து யாரும் குடிக்காதீங்கய்யா!
தன் மூன்று குழந்தைகளுக்காக பழனி முருகனிடம் வேண்டிக்கொண்டு பாதயாத்திரை செல்ல ஆறு மாதங்களாக விரதமிருந்து வருகிறார் நாகராஜ். ஒழுகும் வீட்டில் வாழ்ந்தபடி மூத்த மகள் 10ம் வகுப்பும், மகன் 8ம் வகுப்பும், இளைய மகள் 6ம் வகுப்பும் படிக்கின்றனர்; மூவரின் முகத்திலும் அன்னையை தொலைத்த ஏக்கம்!
படிச்சு என்ன ஆகணும்னு நீஆசைப்படுறேம்மா?
நான் நர்ஸ் ஆகணும்!
என்ன ஒரு வேதனையை சுமந்திருந்தால் இப்படி ஒரு பதிலை மூத்தவள் சொல்லி இருப்பாள்! தன் கனவுச்சீருடையில் இவள் பணிக்கு செல்லும் தினத்தில் ஷர்மிளாவின் ஆன்மா நிச்சயம் இளைப்பாறும்.
அன்று, தமிழக அரசின் பாவக்கணக்கில் ஒன்று குறையும்.
