PUBLISHED ON : நவ 06, 2022

திடீர் துாறல்; விறகுகளை ஜோதி பாதுகாத்து முடிக்கவும், மழை வேகமெடுக்கவும் சரியாக இருந்தது. ஒரு நாய் தன் குட்டிகளுடன் மழையில் தடுமாற 'ஏய்... இங்கே வா' என்றார். ஜோதி - மழை - நாய் மற்றும் அதன் குட்டிகளுடன் நாம் நின்ற இடம் ராமநாதபுரம், அல்லிக்கண் மாயில் உள்ள மயானம்.
திடீர் மழை ஜோதிக்கு என்னென்ன ஞாபகப்படுத்தும்?
என் 10 வயசுல அம்மா இறந்தது, நான் படிக்காம என் ரெண்டு தங்கச்சிகளையும், தம்பியையும் படிக்க வைச்சது, ஜெகந்நாதன் மேல காதல் வந்து அவரை கல்யாணம் பண்ணினது, மூணு பிள்ளைகளை என்கிட்டே விட்டுட்டு சாலை விபத்துல அவர் இறந்தது, அவர் பார்த்த மயான பராமரிப்பு பணி என்கிட்ட வந்ததுன்னு என் வாழ்க்கையில எல்லாமே திடீர் நிகழ்வுகள்தான்!
இந்த வேலையை உங்க மனசு ஏத்துக்குதா?
புண்ணியம் சேர்க்குற வேலை; ஆனா, வருமானம் கிடையாது! இந்த வேலை பார்த்துட்டு, 'சாமி... நல்ல வருமானம் கொடு'ன்னு வேண்டிக்க கூடாதுல்ல! சடலம் எரியூட்டுற நேரத்துல பின்னால தட்டினவனை விறகுக்கட்டையால அடிச்சு விரட்டியிருக்கேன். மாற்று வேலை கேட்டுப்போற இடங்கள்ல, 'அது நல்ல வேலையாச்சே'ன்னு சொல்றாங்க; ஆனா, யாரும் இந்த வேலைக்கு வர்றதில்லை!
மகளை பொறியியல் பட்டதாரி ஆக்கிய ஜோதி, மகள் விரும்பிய திருமண வாழ்வை சாத்தியமாக்கி தந்திருக்கிறார். மூத்த மகன் ஆட்டோ ஓட்ட, இளைய மகன் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார். மகன்களின் எதிர்காலம் குறித்த கவலை ஜோதியிடம் இருக்கிறது!
'செய்யும் தொழிலே தெய்வம்'னு சொல்றதுல ஜோதிக்கு உடன்பாடா?
வேலை சார்ந்த விஷயங்கள்ல வருத்தம் உண்டே தவிர, என் வேலை மேல எனக்கு வெறுப்பு கிடையாது; மயானத்தோட வாசல் கதவை தொட்டு வணங்காம நான் உள்ளே வர்றதில்லை. 'உடல்நலக் குறைவு'ன்னு விடுப்பு எடுத்ததில்லை! இந்த தொழில்ல பரபரன்னு வேலை பார்த்த நாட்கள் உண்டு; அதிக சடலங்களை எரியூட்டின அந்த நாட்கள்ல ரொம்பவே மனசு உடைஞ்சிருக்கேன்!
இறந்தவங்க உங்க வழியா பேசுவாங்களா?
இதென்ன சினிமாவா; ஆனா, ஒரு சம்பவம் இருக்கு! பிள்ளைகளால கைவிடப்பட்ட தம்பதி ராமேஸ்வரம் போயிட்டு ராமநாதபுரம் வந்து தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. இங்கேதான் காரியம். அடுத்த நாள் அஸ்தி வாங்க பிள்ளைகள் வந்தாங்க. 'இந்த பாசத்தை அப்போ காட்டியிருந்தா ஆத்தாளையும் அப்பனையும் இழந்திருக்க வேண்டாமே'ன்னு சட்டுன்னு சொல்லிட்டேன்; என் வார்த்தைகள் அந்த ஆத்மாக்களோடதா கூட இருக்கலாம்!
'எனக்கொன்றும் வேண்டாம்; மயானத்தில் பூந்தோட்டம், குடிநீர், உயர் மின்விளக்கு கோபுர வசதி வேண்டும்!' - ஜோதியின் விருப்பம்.
ஜோதியின்புதுப்புது அர்த்தங்கள்* இறப்பு? - விடை* உடல்? - பொய்* நெருப்பு? - உண்மை
