PUBLISHED ON : அக் 23, 2022

ஆடு/ மாடு மேய்த்து, பால் கறந்து, சமையல் முடித்து, கூலி வேலைக்குச் செல்லும் கணவரை குறித்த நேரத் தில் அனுப்பி வைத்து, தன்னைப் போல் படிக்காமல் இருந்துவிடக் கூடாதென்று 2 கி.மீ., தொலைவி லுள்ள பள்ளிக்கு இரு பெண் பிள் ளைகளை அழைத்துச் சென்று, வயதான தாயாரை பராமரித்து...
இத்தனை களைப்பிற்கு நடுவில் களிப்போடு வாழ்கிறார் திருப்பூர் வே. கள்ளிப்பாளையத்தின் 35 வயது சுதா எனும் பேச்சியம்மாள்; இந்த ஆண்டின் குடியரசு தின விழாவில், வீரதீரச் செயலுக்கான 'அண்ணா விருது'க்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்!
பெண்கள் தைரியத்தின் அடையாளமா?
அப்படிச் சொல்லிட முடியாது; ஆனா, எல்லா பெண்ணுக்குள்ளேயும் வீரம் இருக்கு; சந்தர்ப்ப சூழல்கள்தான் அந்த வீரத்தை வெளியே கொண்டு வரும். என்னைப் பொறுத்தவரைக்கும் சகிப்புத்தன்மை கூட வீரம்தான்!
2021 அக்டோபர் மாதத்தின் மழைநாளில் பி.ஏ.பி., பாசன வாய்க்காலில் 6 மாணவியரும், அவர்களை காப்பாற்றச் சென்றவர்களும் சிக்கிக் கொள்ள, அருகாமையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பேச்சியம்மாள் ஓடிச் சென்று, தன் சேலையை உருவிப் போட்டு அவர்களை மீட்டிருக்கிறார்.
பெருமையா உணர்றீங்களா பேச்சி?
அன்னைக்கு மூணு பேர் கரையேறிட்டாங்க! நாலு உயிரை நான் காப்பாத்திட்டேன். 'அந்த ஒரு உயிரை காப்பாத்த முடியலையே'ங்கிற துக்கம் இன்னும் இருக்கு! அந்த உயிரையும் காப்பாத்தி இருந்தா இந்த விருது இனிச்சிருக்கும்!
'உதவிக்கு எதற்கு பரிசு' எனும் வெள்ளந்தி மனம் முதலில் விருதை ஏற்க விரும்பவில்லை. 'விருதும், வெகுமதியும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும்' எனும் அறிவுரைகளுக்குப் பிறகு, மார்ச் மாதத்தில் தமிழக முதல்வரிடம் விருதைப் பெற்றிருக்கிறார்.
தன் சோகம் கழுவ பெண்ணுக்கு கண்ணீர் அவசியமா?
ஏன்... 'உழைப்பு' இருக்கே! எங்கப்பாவை நோய்க்கு தொலைச்சு 12 ஆண்டுகள்; என் தம்பியை விபத்துல பறிகொடுத்து 14 ஆண்டுகள்; எதுக்கும் நான் பெருசா அழலை! இந்த நெஞ்சுரத்துக்கு காரணம்... எங்கம்மா. சிகிச்சைக்கு கடன் வாங்காம எங்கப்பாவை மீட்டு கொண்டு வந்திரணும்னு அவங்க போட்ட உழைப்பு எனக்கு பெரும் பாடம்!
பணமில்லா வாழ்க்கை சந்தோஷமா இருக்குதா?
பெரிய படிப்பு படிச்சு, நல்ல வேலை, கைநிறைய சம்பளம்னு வாழ்ற வாழ்க்கையில செயற்கைத்தனம் இருக்குறதா நான் உணர்றேன். என் சந்தோஷம் எனக்குள்ளே இருக்குறதா நம்புறேன்.
ஆசைகள் 1000
* என் பெண் பிள்ளைகள் மனிதர்களை படிக்க கத்துக்கணும்!* என் பராமரிப்புல ஆயுள் முழுக்க அம்மா திருப்தியா இருக்கணும்!* உதவணும்னு நினைக்கிறப்போ என் கையில பணம் இருக்கணும்!
