PUBLISHED ON : மே 27, 2020

வணக்கம்,
நான் உதயசக்தி. பெரம்பலூர் மாவட்டம், ஆலந்தூர் வட்டத்துல இருக்கிற அயினாபுரம் குக்கிராமத்தின் முதல் சட்டக்கல்லூரி மாணவி.
* ஊரடங்கு நாட்களில் உதயசக்தியின் பொழுதுபோக்கு?
எங்க ஆட்டுக்குட்டிகளோட சந்தோஷமா விளையாடுறேன்.
* விடுமுறை நாட்களில்?
விவசாய கூலி வேலைக்கு போவேன்.
* வீட்டுல பிரிட்ஜ், வாஷிங்மிஷின் இருக்கா?
ம்ஹூம்... இப்போதான், புதுசா ஒரு பழைய டிவி வாங்கியிருக்கோம்!
* ஒருநாள் சேமிப்பு?
பஸ் டிக்கெட்டுக்கு போக 10 ரூபாய் மிச்சமிருக்கும்.
* திரையரங்கில் பார்த்த முதல் படம்?
தொடரி
நான் பிளஸ் 2 முடிச்சிருந்த நேரம். எனக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சிட்டாங்க. பிடிவாதம் பண்ணி, பி.எஸ்சி., முடிச்சேன். மறுபடியும் கல்யாண முயற்சி; ம்ஹும்... நான் அனுமதிக்கலை! போராடி எம்.எஸ்சி., முடிச்சேன். மறுபடியும் பழைய புராணம். நான் சட்டம் படிக்க விண்ணப்பிச்சேன். கலந்தாய்வுக்காக சென்னை போக வேண்டிய சூழல்லதான் அப்பாகிட்டே சொன்னேன். இப்போ, இறுதியாண்டு படிக்கிறேன். மனசுல, ஐ.பி.எஸ்., கனவும் இருக்கு!
படிக்கிறதுக்கு இவ்வளவு பெரிய போராட்டமா?
சாலைகள் மூலமா எங்க கிராமம் நகரத்தோட இணைஞ்சிடுச்சே தவிர, அதுல பயணப்பட்டு ஜெயிக்கிற அளவுக்கான வாய்ப்புகள் எங்களுக்கு இன்னும் முழுசா கிடைக்கலை. வீட்டுல இருக்குறவங்க ஏற்படுத்துற தடை ஒருபக்கம்னா, போக்குவரத்து வசதி இன்னொரு தடை. குறிப்பிட்ட நேரத்துக்கு வர்ற பேருந்தை தவற விட்டுட்டா காடு தாண்டி வரணும். ரொம்ப சிம்பிள்... நீங்க வாழ்க்கையில சந்தோஷத்தை தேடுறீங்க; நாங்க வாழ்க்கையை தேடுறோம்!
உதயசக்தியின் கிராமத்தில்..
வற்றாத கிணறு, சிறிய அளவிலான இரண்டு மளிகை கடைகள் உண்டு; தேநீர் கடைகள் இல்லை. நுாலகம் உண்டு என்றாலும், 'பொட்ட புள்ள தனியா போகக்கூடாது' என்பது பெற்றோரின் கட்டளையாதலால் உதயசக்திக்கு அது பயன்படுவதில்லை. ஒரு நாளைக்கு ஆறு முறை ஊருக்குள் வந்து போகிறது 7பி பேருந்து. பெரும்பாலான வீடுகளில் இரு சக்கர வாகனங்கள் உண்டு; உதயசக்தி வீட்டில் அது இல்லை.
என் கனவு
'சட்டம் படிக்கிற உன்னை யாரு கட்டிப்பா; கல்யாணத்துக்கு அப்புறம் உன் பொண்ணு சட்டம் பேசுமேன்னு மாப்பிள்ளை வீட்டுல சொல்லிட்டா என்ன பண்றது?' - இப்படியெல்லாம் யோசிச்சு, என்னை கரையேத்துற நினைப்புல தவிச்சுப் போய் நிற்கிற அம்மாவையும் அப்பாவையும் இந்த ஊரே மெச்சுற அளவுக்கு பிரமாதமா பார்த்துக்கணும்.
