PUBLISHED ON : ஆக 21, 2022

மீன் சந்தையின் நாற்றம், வியர்வை, சகதி, நெரிசல், பேரம் பேசும் குரல்கள், ஐஸ்கட்டி சுமக்கும் தொழிலாளர்கள் என, சமூகத்தின் ஒரு துண்டாகத் தெரியும் மயிலாடுதுறை நகராட்சி மீன் சந்தையில் ரமணியை சந்தித்தபோது... இறால்கள் சுத்தம் செய்ததில் அவரது உள்ளங்கைகள் இரண்டும் ஊறிப் போய் இருந்தன!
இப்படி 'மீன் சந்தையே கதி'ன்னு கிடக்குறீங்களே ரமணி...
என்ன இப்படி சொல்லிட்டீங்க; எம்.பி., எம்.எல்.ஏ., எஸ்.ஐ., தாசில்தார் வரைக்கும் என் பேரு பரிச்சயம்னா, அதுக்கு காரணம் இந்த வேலையில நான் காட்டுற சுத்தம்! 6 வயசுல மீன் வெட்ட வந்தேன்; இப்போ, 47 வயசு! மனுஷங்களால வாழ்க்கையில நிறைய அடிபட்டிருக்கேன்; அதுல சிலரை நானும் அடிச்சிருக்கேன்! நீங்க நம்பணும்... இந்த உலகத்தை எனக்கு கத்துக் கொடுக்கிறதே இந்த மீன் சந்தைதான்!
'பெண் பலவீனமானவள்'னு சொன்னா நீங்க என்ன சொல்வீங்க?
நாமக்கல் பேருந்து நிலையத்துல சம்பவம். பள்ளி விடுதியில இருந்து என் பொண்ணை லீவுக்கு அழைச்சுட்டு வர்றப்போ, பேருந்துல சீட் பிடிக்கிறதுல எனக்கும் ஒரு ஆணுக்கும் வாக்குவாதம். திடீர்னு அவர் என் கழுத்தை நெரிக்க, வலியில நான் அவரை எட்டி உதைக்க, பாவம்... உதை வாங்கின நெஞ்சை தேய்ச்சு விட்டுட்டே அவரு கிளம்பிட்டாரு!
திருமணமாகி 3 ஆண்டுகளுக்குள் கணவரை இழந்த ரமணி தன் மகள் விஜயலட்சுமியை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்திருக்கிறார். காலம் சென்ற தன் சகோதரியின் மகள் படிப்பிற்கு உதவுகிறார். இவரது பராமரிப்பில் இவரது தாயும், மகனும் இருக்கின்றனர்! தான் வளர்க்கும் 3 நாய்களின் நிலை கருதி நகரத்திற்கு வெளியில் வசிக்கிறார்.
ரமணியோட மன உறுதியை சூழ்நிலைகள் அசைச்சு பார்க்குறப்போ...
என் சக்திக்கு மீறி கடன் வாங்கி மகளை ரஷ்யாவுக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணிட்டு இருந்த நேரம். அக்காவோட மரண செய்தி; அடுத்ததா... மரத்துல இருந்து விழுந்து கையில எலும்பு முறிவாகி எனக்கு அறுவை சிகிச்சை!
மீன் வெட்டுற அம்மாவா என் மகளுக்கு நான் எப்பவும் சொல்ற அறிவுரை இதுதான்... 'கஷ்ட நேரத்துல கலங்கி நிற்காதே; இன்னும் அதிகமா வேலை செய்!'
நம்பிக்கை - கடவுள்... எதை நம்புறீங்க?
'ரஷ்யாவுக்கு போன என் பிள்ளை என் மகளாகவே திரும்பி வருவா'ன்னு நம்பிக்கையோட இருந்தேன்; ஆனாலும், அவ வர்ற வரைக்கும் கடவுளைத்தான் அதிகமா நான் நம்பினேன்!
பிள்ளைகளுக்காக பெத்தவங்களா... பெத்தவங்களுக்காக பிள்ளைகளா?
என் மகளோட விருப்பத்தை நான் கொஞ்சம் முன்கூட்டியே புரிஞ்சிருந்தா என் மக என்னைக்கோ 'டாக்டர் விஜயலட்சுமி' ஆகியிருப்பா!
புரியுது ரமணிம்மா.
ரமணியின் புதுப்புது அர்த்தங்கள்!
வாழ்க்கை? - உடல்
உழைப்பு? - உயிர்
