PUBLISHED ON : ஆக 28, 2022

கைகளில் ஒட்டியிருக்கும் குப்பைகளின் மிச்சம்; எப்போதும் அழுக்கு சுமந்திருக்கும் ஆடைகள்; அருவருப்பு இல்லாமல் எதையும் தீண்டிப் பார்க்கும் குணம்... துாய்மைப் பணியாளர்களின் அடையாளம் இவை மட்டும்தானா? இல்லை; அவர்கள் ஒருபோதும் நம் கண்களைப் பார்த்து புன்னகைக்க மறப்பதில்லை... முருகம்மாள் போல!
இந்த பணி நீங்க விருப்பப்பட்டதா... இல்ல,காலம் திணிச்சதா?
'நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்'னு மூணாம் வகுப்பு படிக்கிறப்போ அடம் பிடிச்சிருக்கேன். பெத்தவங்க ரெண்டு அடி போட்டு என்னை பள்ளிக்கூடத்துக்கு அப்போ அனுப்பியிருந்தா என் வாழ்க்கை மாறியிருக்கும்!
இந்த வேலை பிடிக்கலையா?
ஆரம்பத்துல வெறுப்பா இருந்தது... இப்போ இல்லை! 'நம்ம உடம்பை டாக்டருங்க அருவருப்பா பார்த்தா நல்லது நடக்குமா; என் வேலையும் அப்படித்தான்'னு உணர்ந்துட்டேன்! இப்போ, தெரு முழுக்க சுத்தம் பண்ணிட்டு திரும்பி பார்த்தா பெருமையா இருக்கு!
மக்கள் உங்களை ஏத்துக்குறாங்களா?
ஒரு வீட்டுல குடிக்க தண்ணீர் கேட்டப்போ, குளியலறை குவளையில தண்ணீர் கொடுத்தாங்க; அவங்க பார்க்காத நேரத்துல தண்ணீரை கொட்டிட்டு 'நன்றி' சொல்லிட்டு வந்துட்டேன்!
இவ்வளவுதான் எதிர்வினையா?
'குப்பை அள்ளுறவங்க குப்பைகள் கிடையாது; யாருக்கோ மகள், மனைவி, அம்மா, அண்ணன், தம்பி, கணவன்ங்கிற அந்தஸ்து உள்ளவங்க'ங்கிற புரிதல் இல்லாத மனிதர்கள்கிட்டே என்ன பேசி என்ன பிரயோஜனம்?
'மனிதம் அழுகிப் போயிருச்சு'ன்னு நினைக்கிறீங்களா?
குப்பைகள் கூட உடைஞ்ச கண்ணாடி துண்டுகள், பிளேடுகள், குழந்தைகள்/ வயதானவர்களோட கழிவுகள் எல்லாம் சேர்ந்து வருது! 'இதையெல்லாம் தனியா கொடுக்கலாமே'ன்னு சொன்னா, 'இதையெல்லாம் அள்ளுறதுதானே உங்க வேலை'ன்னு மனசு வலிக்கிற மாதிரி பேசுறாங்க!
வேற வேலை தேடிக்க என்ன தயக்கம்?
வாழ்ற வீட்டை ஒருநாள் சுத்தம் பண்ணிப் பாருங்க; வேலை முடிஞ்சதும் அவ்வளவு திருப்தியா இருக்கும். இந்த திருப்தி எனக்கு ஒவ்வொரு நாளும் கிடைக்குது!
முருகம்மாள் ரவிக்கு 49 வயது; 26 ஆண்டுகள் பணி அனுபவம்!
2022 குடியரசு தினத்தில் பெட்ரோல் நிலையத்தில் தேசியக்கொடி ஏற்றியதன் மூலம் அறியப்பட்டவர். மகள், மகனுக்கு திருமணமாகி விட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் குடிசை வீட்டில் கணவரோடு இருக்கிறார்; கணவரும் துாய்மைப் பணியாளர்!
முருகம்மாளின் பெண்மை பெருமைக்குரியதா?
கிடைக்கிற 6,000 ரூபாய் ஊதியத்திற்கு மேல தேவைகள் இருக்கு! ஆனாலும், கிடைச்ச வாழ்க்கையை பிடிச்ச மாதிரி மாத்திக்கிற திறமை எனக்கிருக்கு.
முருகம்மாவின் புதுப்புது அர்த்தங்கள்!
குப்பைதொட்டி? - மனசு
நாற்றம்? - எண்ணம்
