PUBLISHED ON : அக் 09, 2022

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை கூட்ரோடு பேருந்து நிறுத்தத்தில் நம்மை வழியனுப்பி விடைபெற்றார் திலகவதி பழனி. பயணம் துவங்கியதும் திலகவதியுடனான உரையாடல் நினைவுகளை மீட்டியது.
'ஆயிரம் பேர் முன்னால 'மைக்' இல்லாம சத்தமா பேசி கூத்துக் கட்ட தெரிஞ்ச எனக்கு, வீட்டுல அப்பா முன்னால என் கருத்தை தைரியமா சொல்லத் தெரியாது! 'இது வேண்டாம்மா; பொம்பள புள்ள மேடையேறினா நாலு பேரு நீச்சமா பேசுவாங்க'ன்னு அவர் சொன்னார். 'என் மக மேல நம்பிக்கை இல்லைன்னு சொல்லுங்கப்பா; இப்பவே கூத்துல இருந்து விலகிடுறேன்'னு சொன்னேன்.
'அப்பா பேச்சுக்கு நான் எதிர்பேச்சு பேசினது அன்னைக்குதான்; அந்த தைரியம் என் கலை கொடுத்தது! இப்போ, குடும்பமும் ஊரும் என்னை கொண்டாடுது!'
ஒருவர் ஒரு கலையை நேசிக்க, அக்கலைக்குள் நுழைய எதெல்லாம் அடிப்படை காரணமாகுமோ, அவை எதுவும் திலகவதிக்கு அவசியப்படவில்லை. அவருக்கான ஒரே காரணம்... பசி!
'கூடப்பிறந்தவங்க 4 பொண்ணுங்க; நான் மூத்தவ. அப்பா கூத்துக் கலைஞர். எங்க குடும்பத்துல பொண்ணுங்களை யாரும் வேலைக்கு அனுப்ப மாட்டாங்க. அப்பாவோட சொற்ப வருமானம் பத்தாது; கூழும், பழைய கஞ்சியும் தான் பெரும்பாலும்! 'தங்குறதுக்கு இடமும் மூணு வேளை சாப்பாடும் தந்து கல்வியும், கட்டைக்கூத்தும் சொல்லித் தர்றோம்; வர்றியா'ன்னு கூப்பிட்டாங்க; 'சரி'ன்னு கிளம்பிட்டேன்!'
அப்போது திலகவதிக்கு வயது, 11. தற்போது 32. கட்டையால் ஆன ஆபரணங்களுடன் நிகழ்த்தப்படும் இக்கலை, 'சங்கீத் நாடக அகாடமி'யின் 'உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார்' விருதை இவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது. இன்று, 30க்கும் அதிகமான மாணவர்களுக்கு குருவாகி நிற்கிறார். கட்டைக்கூத்து குழுவை நிர்வகித்து வருகிறார். மகாபாரதம் தவிர்த்து சமூகத்திற்கு அவசியமான கருத்துக்களையும் தன் கலை மூலம் மேடையேற்றி வருகிறார்.
இக்கலை பெண்களுக்கானதா?
ஆண்கள் ஆதிக்கம் செலுத்தின கலை; பெண் வேடங்களையும் அவங்களே கட்டிக்குவாங்க! இன்னைக்கு, நான் ஆண் வேடமிட்டு கூத்துக் கட்டுற அளவுக்கு வளர்ந்திருக்கேன். 'கலைத்தாய் ஒரு பெண்ணை எப்பவும் கைவிட மாட்டா'ன்னு நம்பினேன்; என் நம்பிக்கை வீண் போகலை!
திருமணத்தில் உடன்பாடு இல்லையா?
'கலையே கணவன்'னு பொய் சொல்ல விரும்பலை! திருமணம் பண்ணிக்க ஆசைதான்; ஆனா, கைகூடலை! அதனாலென்ன... நான் ரொம்பவே சந்தோஷமா இருக்குறேன்!
வாழ்க்கையை தன்வசப்படுத்தும் முயற்சியில் களைப்படையாமல் உழைக்கும் பெண்களின் பெருநீளப் பட்டியலில்... திலகவதி பழனி.
திலகவதி பழனியின் புதுப்புது அர்த்தங்கள்
*கலை? - மருந்து*வாழ்க்கை? - புத்தகம்*பெண்? - நம்பிக்கை
