PUBLISHED ON : ஜூன் 18, 2023

காகம் ஒன்று மின்கம்பியில் சிக்கி இறந்து கிடக்கும் இடத்தில், காகங்களின் ஓயாத கரையொலி நமக்கு துக்க மனநிலையை தரும். இதுவே இப்படியெனில், சொந்த வாழ்வின் துக்கங்கள்...?
விருதுநகர், மம்சாபுரத்தை சேர்ந்த திவ்யா காதலித்தவரை கரம் பிடித்தார்; இரண்டு ஆண்டுகள் கழித்து கணவர் மின்சாரம் தாக்கி இறந்து போக, 23 வயதில் ஒரு வயது மகளுடன் நின்றவரை துக்கம் மலைப்பாம்பாய் இறுக்கியது!
இதிலிருந்து மீள திவ்யாவிற்கு எத்தனை காலம் ஆயிற்று?
எட்டு ஆண்டுகள் ஓடிருச்சு; என் மக வைஷ்ணவியோட எதிர்காலம் பற்றிய சிந்தனைதான் இந்த துக்கத்துல இருந்து என்னை மீள வைச்சது! மனஅழுத்தத்துல சிக்கி சித்ரவதைகளை அனுபவிச்ச அந்தகாலத்தை எப்படியோ கடந்து வந்துட்டேன்!
திவ்யா ஆறாம் வகுப்பு படிக்கும்போது அவரது இதயத்தில் இருந்த பிரச்னை கண்டறியப்பட்டது. 'பதற்றமடைய கூடாது; கடின பணிகள் கூடாது' என சிறுவயது முதல் மருத்துவரின் அறிவுரை; இச்சவாலுடன், 23 வயதில் மனஅழுத்தமும் கைகோர்த்துக் கொண்டது!
எதனால் மனஅழுத்தம்?
'இனி நம்ம வாழ்க்கை என்ன ஆகும்'ங்கிற இடைவிடாத சிந்தனைதான் முதல் காரணம்; விசேஷ வீடுகளுக்கு போக முடியாத, பூவும் பொட்டும் வைச்சுக்க முடியாத சூழல் கூடுதல் அழுத்தம்! என்னை நானே திசை திருப்ப அரசு பணிக்கான போட்டி தேர்வுகளுக்கு தயாராகணும்னு முடிவு பண்ணினேன்!
இன்று, விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் இளநிலை உதவியாளராக இருக்கிறார் திவ்யா. இந்நிலையை எட்ட மனம், சமூகம், இதய பிரச்னை எனும் மும்முனை தாக்குதலுக்கு எதிராய் ஐந்து ஆண்டுகள் போராடி இருக்கிறார்!
துக்கத்தில் இருந்து மீள்வது அத்தனை சவாலானதா?
துக்கத்துல தவிக்கிற வலியை விட மீள முயற்சிக்கிறப்போ அதிகமா வலிக்கும்! விருதுநகர்ல நில எடுப்பு தாசில்தாரா இருக்குற மாரிமுத்து சார் போட்டி தேர்வுக்கு தயாராகுற ஏழை மாணவர்களுக்கு இலவச பயிற்சி தர்றார். அந்த வகுப்புகள் என்னோட வலி மறக்க வைச்சது. இதய பிரச்னைக்கான அறுவை சிகிச்சையும் எனக்கு ஆறுதலா இருந்தது!
பணிக்கு செல்ல திவ்யா தினசரி 90 கி.மீ., பயணிக்கிறார். பொது இடங்களில் சுகாதாரமற்ற கழிப்பிடம் தரும் சிரமங்கள், இதயம் காக்க தவறாது எடுக்க வேண்டிய மருந்துகள் என, 33 வயதில் அன்றாடம் போராடி வாழ்கிறார்!
மகளுக்கு என்ன சொல்லி வளர்க்குறீங்க?
நீ என்ன ஆகணும்னு நீயே முடிவு பண்ணு. உன்னோட இன்னும் அதிக நேரம் இருக்க அம்மா முயற்சிக்கிறேன். வாழ்க்கையில இழப்புகள் வரும்; அதை உண்மையா எதிர்கொள்ள பழகு.
திவ்யாவின்புதுப்புது அர்த்தங்கள்* துக்கம்? - மழை* மனம்? - குடை* பணி? - ஊன்றுகோல்
