PUBLISHED ON : ஜூலை 23, 2023

ஒரு மனிதன் வளர சமூகமும் வளர்கிறது; சமூகம் வளர ஒவ்வொரு தனி மனிதனும் வளர்கிறான். இவ்வகையிலானதே நாகப்பட்டினத்தில் உள்ள அபிநயா, ஐஸ்வர்யாவின் வளர்ச்சி!
ஜெயபால் ஒரு மீனவர் - அவரது மனைவி சுபா இல்லத்தரசி. இவர்களின் மூத்த மகள் அபிநயா; முதுகலை 'லைப் சயின்ஸ்' படித்துவிட்டு குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகி வருகிறார். இளைய மகள் ஐஸ்வர்யா சமீபத்தில் 14 தங்கப் பதக்கங்களுடன் மீன்வள படிப்பில் இளங்கலை முடித்துவிட்டு மும்பையில் முதுகலை பயில்கிறார்!
சமூகம் உங்க வளர்ச்சிக்கு உதவுதா?
அபிநயா: வீட்டுக்கு பக்கத்துல இருக்குற கல்லுாரியில படிச்சு பட்டம் வாங்கி, ஏதாவது ஒரு வேலையில சேர்ந்து, அப்புறம் திருமணம், குழந்தைகள்னு வாழ்க்கையோட போக்குல போற சூழலைத்தான் இந்தகால பெண்களுக்கு சமூகம் தந்திருக்கு; இம்மாதிரியான சமூகம் என் வளர்ச்சிக்கு உதவாது!
இளங்கலையில் 14 தங்கப் பதக்கங் கள் எப்படி சாத்தியமானது?
ஐஸ்வர்யா: இளங்கலை முடிச்சதும் அக்காவும் நானும் அடுத்து என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம்ங்கிற விபரங்களை எங்க முன்னால வைச்சாரு அப்பா. ஒருகாலத்துல, பெண்கள் படிச்சாலே முன்னேற்றம்னு இருந்தது. இப்போ, அது மட்டும் போதாது; கல்வி அறிவோடும் சுயத்தோடும் இருக்கிறதுதான் நிஜ முன்னேற்றம்னு சூழல் மாறிடுச்சு! இதை அம்மா, அப்பா புரிஞ்சு வைச்சிருக்கிறதால 14 தங்கப் பதக்கங்கள் எனக்கு சாத்தியமாச்சு!
உள்ளூர் பார்வையில் ஜெயபால் சாதாரண மனிதர்; நுாலக பிரியர். 'மற்ற குடும்பங்களில் நிகழ்வது தன் குடும்பத்திலும் நிகழ்ந்தாக வேண்டும்' எனும் சராசரி வேட்கை தாய் சுபாவுக்கு இல்லை. மகள்கள் தீபமாக பிரகாசிக்க தந்தையும் தாயும் மாடங்களாக இருக்கின்றனர்.
எதனிடம் இருந்து உங்களை தற்காத்து கொள்கிறீர்கள்?
அபிநயா: நமக்கான களத்துல திறமையை வளர்த்துக்கிட்டு முன்னேற கல்வியை பயன்படுத்தணும். ஆனா, அந்தஸ்து, பெரிய சம்பளத்துக்காகத் தான் கல்வியை பயன்படுத்துறாங்க. இந்த அழுகல் சிந்தனையில இருந்து என்னை தற்காத்துக்குறேன்!
பெற்றோர் பழக வேண்டியது என்ன?
அபிநயா: 'யாரோட பிள்ளைகளோ நடந்து போன பாதுகாப்பான பாதையில நம்ம பிள்ளையும் நடந்து போகணும்'னு நினைக்காதீங்க; 'நம்ம பிள்ளைகளால புதுப்பாதைகளை உருவாக்க முடியும்'னு நம்புங்க!
பெண் பிள்ளைகள் பழக வேண்டியது?
ஐஸ்வர்யா: 'அரைகுறை ஆடைகளும், நவீன கலாசாரமும் முன்னேற்றத்தின் அடையாளங்கள்'னு நினைக்கிறதை தவிர்க்கணும்.
அபிநயா - ஐஸ்வர்யாவின் புதுப்புது அர்த்தங்கள்* வாழ்க்கை? - உடல்* அறிவு? - ஊட்டச்சத்து* சந்தோஷம்? - உயிர்
