PUBLISHED ON : ஜூலை 16, 2023

திருப்பத்துார், வாணியம்பாடி, மேட் டுப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த 37 வயது சங்கீதாவுக்கு 15 வயதில் மகள், 19 வயதில் மகன்; தோல் தொழிற்சாலையும், உடற்பயிற்சி கூட மும் இவரது உலகம். 'பாடிபில்டர்' அடையாளம் தன் உழைப்பால் இவர் உருவாக்கி வைத்திருக்கும் கவுரவம்!
சங்கீதாவின் 16
வறுமை; 10ம் வகுப்பு வரைக்கும்தான் என்னால படிக்க முடிஞ்சது. அம்மா கூட கட்டட வேலைக்குப் போனேன். 2001ம் ஆண்டு 16 வயதுல திருமணம். திருமணம் ஆன நாலாவது நாள் தோல் தொழிற்சாலைக்குப் போயிட்டேன். ஆட்டுத்தோல்ல இருக்குற ரோமம் பிடுங்குறதும், மட்கிப் போற தோலை லாரியில ஏத்துறதும் வேலை! இப்பவும் பழைய ஈடுபாட்டோட அந்த வேலையை பார்த்துட்டு இருக்குறேன்!
இப்படியொரு வாழ்க்கையில 'பாடி பில்டர்' அடையாளம் எப்படி?
நல்லா துவங்கின திருமண வாழ்க்கைக்கு அவரோட குடிப்பழக்கம் முடிவுரை எழுதிருச்சு! பிரசவம் முடிஞ்ச சமயத்துல என் வயித்துல உதைச்சு, எனக்கு தையல் பிரிஞ்சு, ப்ப்ச்ச்ச்... 22 வயசுல திருமண பந்தம் முறிஞ்சு போச்சு! அதுக்கப்புறம், தனியா வாழ்றதுல பல சிக்கல்; என்னை காப்பாத்திக்க என் அடையாளத்தை மாத்தணும்னு முடிவு பண்ணினேன். 2018ம் ஆண்டு உடற்பயிற்சி கூடத்துக்குப் போனேன்.
தோல் தொழிற்சாலையின் கடினங்களுக்கு பழகிய உடல் என்பதால் உடற்பயிற்சி கருவிகளை எளிமையாக கையாண்டிருக்கிறார் சங்கீதா! போட்டிகளுக்கு தயாராகும் உடற்கட்டு பெற உதவும் இறைச்சிகள், உலர்பழங்களுக்கு வாய்ப்பில்லை எனினும் கிடைத்ததில் நிறைவு கண்டு தன்னை செதுக்கியிருக்கிறார்.
முதல் மேடை அனுபவம்?
பட்டுக்கோட்டையில 2020ம் ஆண்டு முதல் மேடை; 'நீ ஒரு வீராங்கனை; உன் உடையை நீயே உறுத்தலா உணரக்கூடாது; கூச்சத்தை உதறிட்டு முன்னேறிப் போ'ன்னு பயிற்சியாளர் உத்வேகம் தந்தார். மேடையில நான் நுழைஞ்சதும் அந்த கரகோஷத்தை கேட்டேன். 'இதுதான் இனி நம்ம உலகம்'னு அந்த நிமிஷமே முடிவு பண்ணிட்டேன்!
மேட்டுப்பாளையம் ஊருக்குள் இவரை 'அக்கா, மாஸ்டர்' என அன்பு ததும்ப அழைக்கின்றனர். 'மிஸ்டர் தமிழ்நாடு' பட்டம், தென்னிந்திய அளவில் தங்கம், ஓபன் ஏசியா போட்டியில் முதலிடம், சமீபத்தில் சென்னை போட்டியில் தங்கம் என, இதுவரையில் 10 பதக்கங்கள், 17 கோப்பைகளை சொந்தமாக்கி இருக்கிறார் சங்கீதா!
இந்த சமூகத்துக்கு சங்கீதாவின் செய்தி...
தோல் கம்பெனியில நாள் முழுக்க உழைக்கிறேன்; உடற்பயிற்சி கூடத்துல வியர்வை சிந்துறேன்; இதெல்லாம், என் பசங்க எதிர்காலத்துக்காக! அதனால, தனியா வாழ்ற என்னை மாதிரி பெண்களுக்கு மனஅழுத்தம் தராதீங்க... ப்ளீஸ்.
ஆசைகள் ஆயிரம்!
* ஒழுகும் கூரை வீட்டை சீர் செய்யணும்* சொந்தமா மளிகை கடை வைக்கணும்* தேசிய அளவுல சாதிக்க 'ஸ்பான்சர்' கிடைக்கணும்.
