PUBLISHED ON : செப் 10, 2023

நான்கு ஆண்டுகளுக்குப் பின் ஆட் டோவில் வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறார் தாட்சாயணி. 'வாசலில் அம்மா காத்திருப்பாள்; ஆரத்தழுவி வரவேற்பாள்' எனும் எண்ணம் மனம் முழுக்க! வீட்டு வாசலுக்கு ஆட்டோ வந்துசேர...
வாசலில், ஆரத்தி தட்டுடன் சொந்தபந்தங்கள் மட்டும்; வீட்டிற்குள் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் தாட்சாயணியின் அம்மா! 'சந்தன்ராஜ்' ஆக சென்ற மகன், 'தாட்சாயணி' எனும் மகளாக வந்து இறங்குவதைப் பார்க்க அத்தாய்க்கு அன்று துணிவில்லை! இன்று, ஜெ.தாட்சாயணி, திருவள்ளூர் மாவட்ட கோடுவெளி ஊராட்சியின் செயலர்!
இப்போ, அம்மா உங்களை ஏத்துக்கிட்டாங்களா?
இப்பவும் 'தாட்சாயணி'ன்னு யாராவது கூப்பிட்டா அம்மாவுக்கு கோபம் வருது; ஆனா, 'பெண்ணா மாறினதுக்கப்புறம்தான் நான் இயல்பா இருக்குறேன்'னு அம்மாவுக்கு புரிய வைச்சிட்டேன்!
போராட்ட காலம் பற்றி...
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே என் அகத்துல இருந்த பெண்மையை உணர்ந்துட்டேன். ஆனா, கிண்டல்களுக்கு பயந்து அடித்தொண்டையில இருந்து பேசுவேன்; திமிரா இருப்பேன்! ஒருகட்டத்துல, 'போலியான வாழ்க்கை போதும்'னு மனசு சொல்லுச்சு; என் இயல்புல வாழ ஆரம்பிச்சேன்! சுற்றம் கேலி பேசுனதால வீட்டை விட்டு வெளியேவந்துட்டேன்!
'ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதை ஏற்க முடியாது என்றால், தன்னை பெண் என்று உணரும் ஓர் ஆணிடம் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவது சரியா' எனும் கேள்வியை வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் வீசி வருகிறார் தாட்சாயணி.
இந்த மனவலிகள் தவிர்த்து...
என்னை மாதிரி அறுவை சிகிச்சை பண்ணிக்கிட்டா, முகத்துல வளர்ற முடிகளை 'ஷேவ்' பண்ணாம பிடுங்கிதான் எடுக்கணும்னு எங்க சமூகத்துல ஒரு வழக்கம்; அப்போ, கடுமையா வலிக்கும். அறுவை சிகிச்சைக்காக தண்டுவடத்துல ஊசி போட்டதால அடிக்கடி முதுகு வலிச்சுட்டே இருக்குது!
திருநங்கைகள் பற்றி சமூகத்தின் பார்வையில் மாற்றம் ஏதும்...
'இந்த வரிசையில நீங்க நிற்கக்கூடாது'ன்னு கோவில்ல எங்களை விரட்டுற கூட்டமும் இருக்கு; குழந்தையை கையில கொடுத்து பெயர் வைக்கச் சொல்ற மனிதர்களும் இருக்குறாங்க! மாற்றங்கள் நிகழ்ந்துட்டு இருக்குறதை நான் உணர்றேன்!
கடந்த நான்கு மாதங்களாக முதியவர்களுக்கு காலை உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருக்கும் தாட்சாயணிக்கு, 'ஆதரவற்றோர் இல்லம் துவக்க வேண்டும்' என்பது ஆசை. காரணம் கேட்டால், 'நான் கவனிச்சுக்கிற நாலு பேர் கடைசி காலத்துல என்னை துாக்க வருவாங்கன்னு ஒரு நம்பிக்கை' என்கிறார்.
தாட்சாயணியின்புதுப்புது அர்த்தங்கள்*கடவுள்? - மனசு*அம்மா? - பரிசு*வாழ்க்கை? - சவால்
