PUBLISHED ON : செப் 03, 2023

பாகைமானி மூலம் தேவியின் 49 ஆண்டு கால வாழ்வை பல்வேறு கோணங்களில் நோக்கினால் பல குட்டி சம்பவங்களை காணலாம்; அவற்றின் ஒன்றுகூடல் தான் இன்றைய தேவி. மதுரை யானைமலை ஒத்தக்கடை வீட்டில், தன் வாழ்வை பல கோணங்களாக பகுத்தாய்ந்து பேசினார்!
ஸீரோ டிகிரி
அப்போ மதுரை, எம்.கே.புரத்துல வீடு. பள்ளியில இருந்து வந்ததுக்கு அப்புறம் எங்க பகுதி பகவதி அம்மன் கோவில்லதான் என்னை அதிகமா பார்க்க முடியும். கும்மி பாட்டு பாடிக்கிட்டு, ஏதாவது வேலை செஞ்சுட்டு அங்கேயேதான் இருப்பேன். ஒருநாள், 'சாலை விரிவாக்கம்'னு சொல்லி அந்த கோவிலை இடிச்சுட்டாங்க. கண்ணை மூடி என் பால்யத்தை அசைபோட்டா அந்த கோவில் இடிக்கப்பட்ட காட்சிதான் என் நினைவுக்கு வரும்!
45 டிகிரி
தனியார் கல்லுாரியில முதுநிலை பார்மசி முடிச்சிட்டு அங்கேயே விரிவுரையாளரா சேர்ந்தேன். இந்து சமய அறநிலையத்துறை நடத்தின சிற்பக்கலை பயிற்சி வகுப்புல கலந்துக்கிட்டேன். இன்னைக்கு நான் கட்டடக்கலை, சிற்பத்துறை ஆய்வாளரா இருக்க அந்த பயிற்சிகள்தான் காரணம்! மதுரையை சுற்றி ஆயிரக்கணக்கான நடுகற்கள், பாறை ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுகளை ஆய்வு பண்ணி வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கேன்!
'எங்க ஜாதிக்கு பெருமை வர்ற மாதிரி ஓர் ஆய்வு பண்ணி கொடுங்க' என்று சில கரை வேட்டிகள் தேவியை நாடுவதுண்டாம்; அத்தருணங்களில், 'அய்யோ... தமிழா' என தலையில் அடித்துக் கொள்வதாய் வேதனை பகிர்கிறார் தமிழினத்தின் தொன்மை அறிந்த தேவி!
90 டிகிரி
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கல்வெட்டுல படைத்தளபதியின் மனைவி ஜேஷ்டா தேவிக்கு சிலை எழுப்பினதா குறிப்பு இருந்தது. கோவில்ல சிலை இல்லை. வெளிச்சம் புகாத, மனித காலடிப்படாத கோவில் அறைக்குள்ளே தீப்பந்தத்தோட நுழைஞ்சேன். அந்த சிலையை அப்போ நான் பார்த்ததுக்கும், எனக்கு முன்னாடி யாரோ பார்த்ததுக்குமான கால இடைவெளி சில நுாற்றாண்டுகள் இருக்கலாம்! ஆய்வு பயணத்துல நான் மெய் சிலிர்த்த தருணம் அது!
145 டிகிரி
திருமணத்துக்கு அப்புறம் எனக்கு குழந்தைகள் இல்லை; இதனால, மனசுக்குள்ளே இனம்புரியாத பதற்றம்; இதுல இருந்து விடுபட எனக்கு பிடிச்ச விஷயங்கள்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்; இப்போ, அந்த பதற்றம் இல்லை!
180 டிகிரி
இன்னைக்கு நான் தாவர மருந்தியல் பேராசிரியை. தொல்லியல் ஆய்வுகளை என் சுய விருப்பத்துக்காக பண்றதால, எந்த அங்கீகாரத்தையும் நான் எதிர்பார்க்கலை. ஆர்வமா வர்றவங்களுக்கு மட்டும் இலவசமா சிற்ப ஆய்வு பயிற்சி தர்றேன்.
ஆசைகள் 1000* தமிழகம் முழுக்க ஆய்வு பண்ணணும்!* மனசுல சிலந்திவலை வராம பார்த்துக்கணும்!* தொல்லியல் துறையில அதிக பெண்களை பார்க்கணும்!
