
'தாலி கட்டுறவனா... இல்ல, மனசுக்குள்ளே இருக்கிறவனா... ஒரு பெண்ணுக்கு புருஷன்ங்கிறது யாரு?' - இந்த கேள்விக்கு பதில் உணர்ந்த என் பொண்ணு, ஜீவாவைத் தேடிப் போனா!
ஜீவா... எனக்குள்ளே காதல் விதைச்ச மனுஷன். வெறும், 30 நாள் பழக்கம்; ஆனா, எனக்கு எல்லாமுமா ஆனான். ஒருநாள்...
'என்னைப் பார்க்கிறபோதெல்லாம் கட்டிப் பிடிக்கிறே; முத்தம் கொடுக்க முயற்சி பண்றே; நமக்குள்ளே, 'அந்த' விஷயமும் முடிஞ்சு போச்சுன்னா, நான் உனக்கு சலிச்சுப் போயிருவேன்ல?' - நான் இப்படிக் கேட்டதும், ஜீவா சொன்னான்...
'இல்ல மெஹந்தி... உன் தோல் சுருங்கினதுக்கு அப்புறமும், இதேமாதிரி நான் உன்னை கட்டிப் பிடிச்சுக்குவேன்; முத்தம் கொடுப்பேன்; உன்னை என் கைக்குள்ளே வைச்சு பார்த்துப்பேன்; ஏன்னா, எனக்கு உன் மேல இருக்கிறது... காதல்!'
விதி... என்னையும் ஜீவாவையும் கணவன் - மனைவியா வாழ அனுமதிக்கலை. இப்போ, மரணப்படுக்கையில நான் இருக்கேன். என் மனசு புரிஞ்சு, ஜீவாவைத் தேடி அழைச்சுட்டு வந்துட்டா என் பொண்ணு. ஜீவாவோட முன்நெற்றி வரைக்கும் நரை. ஆனா, அவன் கண்கள்ல அதே காதல்!
எத்தனை காலம் ஆனாலும், அழுகிப் போகாத ஓர் உணர்வு... காதல்.

