PUBLISHED ON : செப் 01, 2024

ஆகஸ்ட் 25: தரமற்ற சாலைகள் இருப்பினும், 'விபத்துகள் பூஜ்ஜியமாக வேண்டும்' என நம் காவல் துறை விரும்பியது போல், 'டாஸ்மாக்' இயங்கும் தமிழகத்தில் 'குற்றங்கள் பூஜ்ஜியமாக வேண்டும்' என நம் முதல்வரும் விரும்பி இருக்கிறார்!
ஆகஸ்ட் 26: 'தமிழக ரயில்வே மேம்பாட்டிற்கு தேவையான 2,749 ெஹக்டேர் நிலத்தில் 807 ெஹக்டேர் மட்டுமே தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு உள்ளது' என்று ரயில்வே அமைச்சர் விளக்கியதை என் திராவிட மனது நம்பவே நம்பாது!
ஆகஸ்ட் 27: 'கிருஷ்ண ஜெயந்திக்கு முதல்வர் வாழ்த்து சொல்லவில்லை' என்று புலம்புவதை விட, அவரது புதல்வரும் தமிழக அமைச்சருமான உதயநிதி, 'தி.மு.க., அரசு அனைவரது உணர்வுக்கும் மதிப்பளிக்கிறது' என்றதை போற்றுவோம்!
ஆகஸ்ட் 28: மஹாராஷ்டிராவில் பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட சிவாஜி சிலை விழுந்ததில் நான் முழு கவனம் குவித்திருந்த காரணத்தால், நம் கிருஷ்ணகிரி பள்ளியின் கூரைப்பூச்சு விழுந்து மாணவர்கள் ரத்த காயம்பட்டதை அறியவில்லை!
ஆகஸ்ட் 29: 'தேர்தலில் ஜெயித்தால் ஜம்மு - காஷ்மீருக்கு தனிக்கொடி' என்று அறிவித்திருக்கும் தேசிய மாநாட்டு கட்சியுடனான காங்கிரஸ் கூட்டணி பற்றி கேட்டால், 'பா.ஜ., ஆட்சி பாசிச ஆட்சி' என்று எனக்கு ஊட்டப்பட்டதை உளறுவேன்!