PUBLISHED ON : செப் 08, 2024

ஆகஸ்ட் 28: 'இது பெரியார் மண்' என்று அடிக்கடி சொல்லிய உறவு ஒன்று, 'திராவிட மாடல் ஆட்சியில் 2,000 கோவில்களில் குடமுழுக்கு நடந்தேறி இருக்கிறது' என்றது. திருநீறு நீட்டினேன்; கறுத்த நெற்றியில் அழுத்தமாய் பூசிக் கொண்டது!
ஆகஸ்ட் 30: 'பத்து ரூபாய் குளிர்பானம் குடித்து திருவண்ணாமலை சிறுமி பலி' எனும் செய்தி ஆகஸ்ட் இரண்டாவது வாரம்; 'உணவு பாதுகாப்பு துறையில் தமிழகம் முதன்மை மாநிலம்' எனும் அமைச்சரது சிறப்புரை ஆகஸ்ட் கடைசி வாரம்!
செப்டம்பர் 02: 'தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது' என அமெரிக்காவில் முதல்வர் பேசுவதை, 250 பவுன் நகையை கொள்ளையர்களிடம் பறிகொடுத்திருக்கும் திண்டுக்கல் பெண் காவல் ஆய்வாளரும் நிச்சயம் ரசித்திருப்பார்!
செப்டம்பர் 03: 'தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்கும் உறவு இருக்கிறது' என்று அ.தி.மு.க., சொல்வதையும், உச்ச நீதிமன்ற பார்வைக்கு பிறகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் தந்ததையும் முடிச்சிடுவது தவறு!
செப்டம்பர் 04: 'சொன்னதுபோல் என் மகனுக்கு அரசுப்பணி வழங்கவில்லை' என்பது திருச்சி உடன்பிறப்பின் அதிருப்தி. 'அவரை சந்தோஷப்படுத்துவோம்!' - அமைச்சர் நேருவின் வாக்குறுதி. அரசுப்பணிக்கு தீவிரமாய் படித்தபடி பாவப்பட்ட நான்!