ச.பத்மாவதி, திருநின்றவூர்: எனக்கு வயது 50. புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என்று மருத்துவர் கூறிவிட்டார். புற்றுநோய்க்கு அளிக்கப்படும், 'கீமோதெரபி'யினால் பக்கவிளைவுகள் ஏற்படுமா?
எந்த வகையான புற்றுநோய் உங்களை தாக்கியிருக்கிறது என, தெரியப்படுத்தவில்லை. புற்றுநோய்க்கு எந்த மருந்து, எந்த அளவில் அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, பக்க விளைவுகள் இருக்கும். 'கீமோதெரபி'யால் வேகமாக வளரும் புற்றுநோய் திசுக்கள் அழிக்கப்படும்.
ஆனால் சில மருந்துகள், சாதாரண திசுக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரோக்கியமான ரத்த திசுக்களின் அளவு குறைந்துவிட்டால், தொற்றுகள், ரத்தப்போக்கு, உடல் பலவீனம் மற்றும் சோர்வு ஏற்படும்; அதோடு முடி இழப்பு ஏற்படும். பசியின்மை, வாந்தி, வாய் அல்லது உதட்டுப் பகுதிகளில் புண் ஆகியவை ஏற்படும். தோல் அரிப்பு, கை மற்றும் கால் பகுதிகள் உணர்ச்சியற்றுப் போதல், மூட்டு வலி ஏற்படும்.
ஆனால் சிகிச்சை முடிந்து உடல் சீரானதும், மேற்சொன்ன பிரச்னைகள் சரியாகி விடும். மனவலிமை இருந்தால், புற்றுநோயை வெல்லலாம் என்பதை, தங்களுக்கு கூற விரும்புகிறேன்.
ஜெ.ஜெயக்குமார்,
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.
ஏ.பிரதாப், சைதாப்பேட்டை, சென்னை: பற்களில் கறை படியாமல் வெண்மையாக இருக்க, சித்த மருத்துவக் குறிப்புகள் தாருங்களேன்?
வெங்காயச் சாற்றை பல் துலக்கியால் தொட்டு, பல் துலக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பின், எலுமிச்சை பழச்சாற்றில் உப்பை போட்டு கலக்கி, அந்தச் சாற்றை தொட்டு மீண்டும், பல் துலக்கியால் துலக்க வேண்டும். இதுபோல் வாரத்திற்கு ஒருமுறை பல் துலக்க, பற்கள் கறை படியாமல் வெண்மையாக இருக்கும்.
அருண் சின்னையா, சித்த மருத்துவர், சென்னை.
திவ்யா, ஆவடி: சீழ் நிறைந்த பருக்கள் என் முகத்தில் உள்ளன. பருக்கள் காய்ந்து உதிர்ந்த பின், கருமையான தழும்புகளை ஏற்படுத்துகின்றன. அவை மறைய என்ன செய்ய வேண்டும்?
தேங்காய் எண்ணெய் முடிக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, வெதுவெதுப்பான நிலையில், கரும் தழும்புகள் உள்ள இடத்தில் தினமும் தடவி வர, தழும்புகள் மறையும். பாதாம் எண்ணெயில், வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ளதால், அதை வைத்து தினமும் மசாஜ் செய்து வந்தால், பருக்கள் விரைவில் போய்விடும். ஆலிவ் எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்றது. எனவே அதை தினமும், இரண்டு முறை முகத்தில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ வேண்டும். அப்படி செய்து வந்தால், ஒரே வாரத்தில் முகம் பொலிவோடு இருக்கும்.
சி. திலகா, அழகு கலை நிபுணர், சென்னை.

