PUBLISHED ON : ஜூலை 21, 2024

சமீபத்தில் 'லான்செட்' என்ற சர்வதேச மருத்துவ இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியாகி உள்ளது. அதில், நம் நாட்டில் ஆண்களை ஒப்பிடும் போது, பெண்கள் மத்தியில் உடற்பயிற்சியின்மை வெகுவாக அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.
கடந்த 2000ம் ஆண்டில் எடுத்த ஆய்வில், 22 சதவீதமாக இருந்த உடற்பயிற்சியின்மை அடுத்த இரு ஆண்டுகளில், 49.5 சதவீதமாக அதிகரித்து உள்ளது. ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக எடுத்துப் பார்த்தால், 42 சதவீத ஆண்களும், 72 சதவீதப் பெண்களும் உடற்பயிற்சி செய்வது இல்லை என்று தெரிய வந்துள்ளது.
தொற்றாத நோய்களான இதயக் கோளாறுகள், சர்க்கரைக் கோளாறு, சில வகை கேன்சர் வருவதற்கு முறையான உடற்பயிற்சி இல்லாததே காரணம். தினமும் சீராக உடற்பயிற்சி செய்தால் தொற்றா நோய்கள் தாக்கும் அபாயம், 30 சதவீதம் குறையும்.
உடற்பயிற்சி செய்வதில் பெண்கள் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை என்று ஆராய்ந்ததில், 10 வயது வரையிலும் ஆண், பெண் என பாகுபாடும் இல்லாமல் ஓடியாடி விளையாடுகிறோம். வயதிற்கு வந்த பின், தனியாக வெளியில் செல்வது தவறு, ஜிம்மிற்கு செல்ல வேண்டாம், என்று பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் வந்து விடுகின்றன. போதாதற்கு பொதுத் தேர்வுகள் வந்துவிட்டால் மதிப்பெண்கள் வாங்குவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் வருகிறது.
ஒரு சில பள்ளிகளில் இருக்கும் பி.டி., வகுப்புகளும் தேர்வு சமயத்தில் கணக்கு, அறிவியல் ஆசிரியருக்கு தானமாக தந்து விடுவர். இப்படி ஆரம்பமாகும் உடற்பயிற்சியின்மை வேலை, திருமணம், குழந்தை என்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகரும் போது, வாழ்க்கை முழுவதும் தொடர்கிறது.
இத்துடன் அதிக கலோரி உள்ள உணவு, மன அழுத்தம், துாக்கமின்மை என்று பல காரணங்களும் சேர்ந்து, தொற்றா நோய்களுக்கு வழி செய்கிறது.
டீன் - ஏஜ் எனப்படும் வளர் இளம் பருவத்தில் ஹார்மோன் மாற்றங்கள் இரு பாலருக்கும் இருக்கும். ஆண் குழந்தைகள் கிரிக்கெட், புட்பால் என்று தொடர்ந்து விளையாடுவதால், அவர்களை அதிகம் பாதிப்பதில்லை. ஓடியாடி விளையாடும் போது அதிகப்படியாக உள்ள மன அழுத்தம், அதிக ஹார்மோன் சுரப்பு கட்டுக்குள் வரும்; மாதவிடாய் சுழற்சி சீராகும். உடல், மன ஆரோக்கியம் அதிகரிக்கும்.
உடற்பயிற்சி இல்லாததாலேயே பெண்களின் உடல் அமைப்பு குழந்தை பெற்ற பின் மாறிவிடுகிறது.
உடற்பயிற்சி இல்லாததால், 15 வயதில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு அதிகரிப்பதை பார்க்கிறோம். பெண்களுக்கு, 30 வயதில் பலவித ஹார்மோன் கோளாறுகள், மாதவிடாய் பிரச்னைகள், முழங்கால், மூட்டு வலி என்று வருகிறது.
நம் சமூகத்தில் நடனம் மட்டுமே எல்லா வயதிலும் அனுமதிக்கப்பட்ட ஒன்று. விருப்பமான பாடல்களுக்கு நடனம் ஆடும் 'தாண்டவ்' என்ற அமைப்பைத் துவக்கி, இது வரையிலும் 10,000 பெண்களுக்கு மேல் பயிற்சி அளித்துள்ளோம்.
விடுமுறை நாட்களில் கார் ஓட்ட மாட்டேன். எங்கு சென்றாலும் நடந்தே செல்வேன் போன்ற சில சுய கட்டுப்பாடுகளை, நமக்குள்ளே பின்பற்றினால் தான் ஆரோக்கியமாக வாழ முடியும்.
டாக்டர் ஆம்.எம். அஞ்சனா,தலைவர், டாக்டர் மோகன்ஸ் டயாபடிக் மருத்துவ மையம்,
சென்னை.
89391 10000

