PUBLISHED ON : நவ 24, 2024

வாழ்வின் ஆதாரம் பிராண சக்தி. நவீன வாழ்வின் பரபரப்பான சூழலில் ஆழ்ந்து சுவாசிக்காமல், அவசர அவசரமாகவே மூச்சு விடுகிறோம்.
இதனால், உடலுக்கு போதிய அளவு பிராண வாயுவின் சக்தி கிடைக்காமல் உடல் நலமும், ஆயுள் பலமும் குறையும் என சித்தர்கள் கூறியுள்ளனர்.
பிராண வாயுவின் உள்ளீடு குறைந்தால் பல்வேறு நோய்கள் உருவாகின்றன என்று நவீன அறிவியலும் கூறுகிறது.
பல்வேறு சுற்றுச்சூழல் கேடுகளால் காற்றின் தரமும் வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. எனவே தான், சுவாச நோய்கள் மனிதனைக் கொல்லும் முதன்மை நோய்களில் ஒன்றாக மாறி வருகின்றன. தண்ணீரை கேன்களில் வாங்கி பருகுவதைப் போன்று, வரும் காலங்களில் பிராண வாயுவை வாங்கி பயன்படுத்தினாலும் வியப்பில்லை.
மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தும்மல், மூச்சு விடுவதில் சிரமம், மூச்சிரைப்பு போன்ற சுவாசக் கோளாறுகளை அடியோடு போக்கும் திறன் வாய்ந்த மூலிகைகள் சித்த மருத்துவத்தில் உள்ளன.
முசுமுசுக்கை, துளசி, ஆடாதொடா, துாதுவளை, தும்பை, மூக்கிரட்டை, நொச்சி, கண்டங்கத்திரி, கற்பூரவல்லி, நஞ்சறுப்பான் போன்றவை, சிக்கலான சுவாசத்தை சீர்படுத்தக்கூடிய அருமையான மூலிகைகள்.
வெள்ளை எருக்கன் பூவும், மிளகும் சேர்த்து செய்யப்படும் சுவாசக் குடோரி மாத்திரை, சுகமான சுவாசத்தை தரும் எளிமையான சித்த மருந்தாகும். ஒரு மாத்திரையை இரு வேளை எடுத்துக் கொண்டால், சுவாச நோய்களில் இருந்து குணம் பெறலாம். நஞ்சறுப்பான் எனப்படும் ஈச்சரமூலி என்ற மூலிகையும் ஒவ்வாமையால் ஏற்படும் மூச்சிரைப்புக்கு நல்ல மருந்து. மேற்கூறிய மருந்துகளுடன் நுரையீரலுக்கு வலிமை சேர்க்கும் தாளிசாதி சூரணம், துாதுவளை லேகியம், நெல்லிக்காய் லேகியம், திப்பிலி ரசாயனம் போன்ற துணை மருந்துகளையும் பயன்படுத்தி வர, படிப்படியாக சுவாச நோய்களில் இருந்து குணம் பெறலாம்.
சுவாச நோயாளிகள் மழை, குளிர் காலங்களில் நுரையீரலில் கபத்தை சேர்க்கும் பூசணிக்காய், புடலங்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், சவ்சவ், தர்ப்பூசணி, பச்சை வாழைப்பழம், சீத்தாப் பழம், பசலைக்கீரை, வெந்தயக்கீரை போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது; குளிர்பதனம் செய்யப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
சுக்குமல்லி பால், துாதுவளை துவையல், கற்பூரவல்லி பஜ்ஜி, முசுமுசுக்கை அடை, கல்யாண முருங்கை வடை, துளசி குடிநீர், குங்குமப்பூ பால் போன்ற நல்ல உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வர, சுகமான சுவாசம் பெறலாம்.
டாக்டர் மூலிகைமணி அபிராமி, சித்த மருத்துவர், சென்னை 96000 10696, 90030 31796consultabirami@gmail.com