PUBLISHED ON : டிச 09, 2015

மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிகிறார் செல்வி. மருத்துவமனையில் மட்டுமே சேவை செய்ய வேண்டும் என்று அந்த வேலையில் சேர்ந்தார். செல்விக்கு திருமணமாகி, 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். கணவன், தபால் துறையில் வேலை பார்க்கிறார். செல்வியின் அம்மா, குழந்தையை பார்த்துக் கொண்டு, அவருடனே இருக்கிறார்.செல்வியின் அப்பா, அவர் சிறுவயதாக இருந்த போதே, சாலை விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு, சில மாதங்கள் 'கோமா'வில் இருந்த பின், இறந்துவிட்டார். அவர் அம்மா தான், தன்னை கஷ்டப்பட்டு வளர்த்ததாகவும், படிக்க வைத்ததாகவும் பார்ப்பவரிடமெல்லாம், செல்வி பெருமைப்பட்டுக் கொள்வார்.
அந்த விபத்து சம்பவம், செல்வியின் மனதில் ஆறாக் காயமாக நிலை கொண்டுவிட்டது. தன் கணவன் வேலைக்கு செல்வதாக இருந்தால், தினமும் பயந்து கொண்டே வழியனுப்பி வைப்பார். தன் கணவனுக்கும், அப்பாவிற்கு ஏற்பட்டது போல, விபத்து ஏற்படுவதாக கனவு வருவதாகவும், அவரும் இறந்துவிடுவது போல் தோன்றுவதாகவும், அவருடைய அம்மாவைப் போலவே, தானும் தன் குழந்தையை தனி ஆளாக நின்று காப்பாற்ற வேண்டிய நிலை வந்துவிடுமோ என்று பயப்படுவதாகவும் புலம்புவார்.செல்வியின் நிலைமை தீவிரமடைய ஆரம்பித்தது. திடீரென நடு இரவில் தூக்கத்திலிருந்து எழுந்து அழத் துவங்குவார். கவலை அடைந்த அவர் கணவன், என்னை சந்தித்தார். செல்வியைப் பார்த்த உடன், ஒரு விஷயம் புலப்பட்டது; அவருக்கு மனக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மனக்குழப்பம், வயதைப் பொருத்தது. மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய குழப்பம். படித்து முடித்த உடன், நல்ல வேலை கிடைக்குமா என்ற குழப்பம் என, வயதிற்கேற்ப குழப்பங்கள் ஏற்படும். இந்த மனக் கவலைகளும், குழப்பங்களும் நிம்மதியாக இருக்க விடாது. எப்போதும் 'டென்ஷன்' தான். யாரிடத்திலும் கோபமாக பேசுவர். தவறான முடிவெடுத்து அவஸ்தைப்படுவர். நடக்கக் கூடாத ஒன்றை நினைத்து, நடந்துவிடுமோ என்று நினைத்து பயப்படுவது செல்வியின் பிரச்னை. செல்விக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கு பின், செல்வி முழுமையாக குணமடைந்தார்.
- ஆர்.சுந்திரி, மனநல ஆலோசகர், சென்னை

