PUBLISHED ON : ஜூலை 09, 2023

மன அழுத்தம் தொடர்பாக ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள், ஆரம்ப நிலையில் உடலுக்கு நன்மை தரக்கூடியது தான். காட்டில் வாழும் மானுக்கு, துாரத்தில் சிங்கம் வருவது தெரிந்து, அங்கிருந்து தப்பித்தால் தான் உயிர் வாழ முடியும்.
அப்படி ஓடும் போது, 'கார்ட்டிசால்' சுரந்து பதற்றத்தை தருவது, தற்காத்துக் கொள்வதற்கு தான். அதே நேரத்தில் தினசரி எதற்கெடுத்தாலும் பதற்றமடையும் போது, அதிகளவில் சுரக்கும் கார்ட்டிசால் ஹார்மோன், பலவிதமான எதிர்மறை விளைவுகளை தரும்.
'ஸ்ட்ரெஸ்' ஹார்மோன் சுரப்பதற்கு காரணம், மூளையின் அடியில் உள்ள 'ஹைப்போதாலமஸ்' என்ற பகுதி. இது தான் நம்முடைய உடலின் வெப்பநிலை, இதயத் துடிப்பு, நினைவுகள், மகிழ்ச்சி, துக்கம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகள் என்று உடல், மனதை ஒழுங்குபடுத்தும் பகுதி. இதன் கீழ் உள்ள பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வெளிவரும் வேதிப் பொருட்கள், அட்ரினலின் சுரப்பியைத் துாண்டி, கார்ட்டிசால் சுரக்கிறது. அது திரும்பவும் மூளையைத் தாக்குகிறது. குழந்தை கருவில் உருவாவதில் துவங்கி, எல்லா நிலைகளிலும் மன அழுத்தம் இருக்கவே செய்யும். எப்படி நிர்வகிக்கிறோம் என்பதில் தான் நேர்மறை, எதிர்மறை பாதிப்புகள் இருக்கும்.
தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பவர்களால், ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்வது, சீரான நடத்தை, முடிவெடுக்கும் திறன் இவையெல்லாம் செய்ய முடிவதில்லை. அடிக்கடி கோபம் வரும்; வாகனத்தை கூட அவர்களால் சரியாக ஓட்ட முடியாது. அல்சைமர் எனப்படும் மறதி நோய், மற்றவர்களை விடவும் இவர்களுக்கு விரைவில் வரலாம்.
60 வயதிற்கு மேல் வரும் மல்டிபிள் சிரோசிஸ், மூளையில் உள்ள நரம்பு திசுக்கள் வீங்க துவங்குவது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவது தொடர்பான பல நரம்பியல் கோளாறுகள், 30 வயதிலேயே அதிகரித்து வருகின்றன. இதற்கும் பிரதான காரணம் மன அழுத்தமே.
எப்படி கண்டறிவது?
தினசரி வேலைகளை செய்ய துவங்கும் முன் பயம், பதற்றம் வருகிறது; காரியத்தை தள்ளிப் போடுகிறோம். பல நேரங்களில் நாம் கற்ற, பயிற்சி பெற்ற விஷயங்களையே செயல்படுத்த இயலாமல் போகலாம். சரியான துாக்கம் இருக்காது. தினசரி வேலைகளை தொடர்ந்து பாதிக்கும். கருவில் ஆரம்பித்து, கடைசி வரைக்கும், அந்தந்த வயதிற்கு ஏற்ற மன அழுத்தத்தால், பலவிதமான உடல், மன பிரச்னைகள் வரலாம்.
நடத்தை கோளாறு என்பது பொதுவான விஷயம். இந்த விஷயம் இப்படி த்தான் நடக்க வேண்டும் என்று சிலர் பிடிவாதமாக இருப்பர். அதிக அக்கறையுடன் வேலை செய்பவர்கள் இருப்பர். சிலர் எதையாவது யோசித்து, பயந்தே வாழ்வர். இன்னும் சிலர் துறுதுறுவென இருப்பர். இவையெல்லாம் நம் பெற்றோரிடம் இருந்து பெற்ற மரபியல் நடத்தைகள். இத்தகைய நடத்தைகளால், 40 வயது வரை எந்த பிரச்னையும் வராது. அவரின் இயல்பு இது என்று ஏற்றுக்கொள்வர்.
ஆனால், வயதானால் பக்குவம் தேவை என்ற மனப்பான்மை உள்ளதால், அதன்பின், இது ரசிக்கப்படாது. தினசரி நடைமுறையில் நடத்தையால் பிரச்னை வந்தால், நடத்தையில் சில மாற்றங்கள் செய்து, பிறவியிலேயே ஏற்பட்ட நடத்தையால் வரும் பாதிப்பு வராமல் வாழ்க்கையை கொண்டு செல்லலாம்.
நம் நடத்தையில் மாறுபாடுகள் தெரிந்தால், மருந்து, மாத்திரை எடுப்பதற்கு முன், தினசரி உடற்பயிற்சி, சுவாசப் பயிற்சி செய்தால், நடத்தையில் நிதானத்தை தந்து, செயல்பாடுகளில் நேர்மறையான பலனை தரும்.
டாக்டர் வி.சதீஷ்குமார்
நரம்பியல் நிபுணர், சென்னை.

