தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்!


PUBLISHED ON : ஜூன் 24, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 24, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீரிழிவு, உடல் பருமனை தொடர்ந்து, வைட்டமின், 'டி' குறைபாடு, இன்று பொதுவான பிரச்னையாகி விட்டது; 10ல் ஐந்து பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.

வைட்டமின், 'டி' என்பது என்ன?

சூரிய ஒளியிலிருந்து, நம் தோல் தன்னிச்சையாக உற்பத்தி செய்து கொள்ளும், மிக அவசியமான நுண்ணுாட்டச் சத்து. உணவில் இருந்து கிடைக்கும் பல்வேறு சத்துக்கள் முழுமையாக உடலில் சேர வேண்டும் என்றால், வைட்டமின், 'டி' அவசியம்.

பொதுவான குறைபாடாக வைட்டமின், 'டி' மாற என்ன காரணம்?

வெப்ப மண்டல நாடுகளில் வசிக்கும் நம்மை போன்றவர்களுக்கு, இக்குறைபாடு வரவே கூடாது; ஆனால், வாழ்க்கை முறை மாற்றத்தால், இது பொதுவாகி விட்டது. வெயில் மேலே படுவதே இல்லை. அலுவலகம், பள்ளி செல்பவர்கள் கை, கால், முகம் என்று சூரிய ஒளி படும் பகுதிகளை, துணியால் மறைத்து விடுகின்றனர்.

வெளி மாசுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேறு என்ன வழி?

தோலில் உள்ள வியர்வை துவாரங்கள் மூடாமல் இருந்தால், சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்கள், அகச் சிவப்புக் கதிர்கள் உதவியுடன், மாசுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள, தேவையான எதிர்ப்பு சக்தியை, உடம்பு தானே உருவாக்கிக் கொள்ளும். பாதுகாப்புக் கவசம் என்ற பெயரில், சன் ஸ்கிரீன் லோஷன் உட்பட, நாம் பின்பற்றும் வழிகள் அனைத்தும், இதை தடுத்து விடுகிறது.

வைட்டமின், 'டி' ஏன் அவசியம்?

கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களை, தேவையான அளவு, நம் உடம்பு கிரகித்துக் கொள்ள, வைட்டமின், 'டி' போதுமான அளவு இருக்க வேண்டும். 1900களில், ரிக்கெட்ஸ் நோய் பெருமளவு பாதித்தது.

இந்த நோய் பாதிப்பில், எலும்புகள் வலுவிழந்து, மெலிந்து, அடர்த்தி குறைந்து, எளிதில் உடைந்து விடும் அபாயமும், முட்டிகள் இரண்டும் வெளிப்பக்கம் வளைந்து, 'டைமண்ட்' வடிவிலும் காணப்படும்.

குழந்தைகளை பெருமளவு பாதித்த இந்த நோய்க்கு காரணம், கால்ஷியம் பற்றாக்குறை எனக் கண்டறிந்து, கால்ஷியம் மாத்திரைகள் உட்பட, சில சிகிச்சை முறைகளை அப்போது கொடுத்தனர். ஆனால், நாம் சாப்பிடும் உணவில் இருந்து, போதுமான அளவு, கால்ஷியம் எலும்புகளில் சேர்ந்து, எலும்புகள், பற்கள் வலிமையாக இருக்க, இது மிகவும் அவசியம். ஆனால், வைட்டமின், 'டி' குறைபாடு இருந்ததால் தான், ரிக்கெட்ஸ் பிரச்னை என்பது அப்போது தெரியவில்லை.

குழந்தைகள்...

குழந்தைகளுக்கு, 8 வயதில் பால் பற்கள் விழுந்து, அடுத்த, 10 நாட்களுக்குள் வளர ஆரம்பித்து விடும். தற்போது, 6 வயதிலேயே பற்கள் விழுந்து விடுகின்றன; புதிய பற்கள் முளைப்பதற்கு பல மாதங்கள் ஆகிறது. இதற்கும் காரணம் வைட்டமின், 'டி' குறைபாடே!

நிறத்திற்கு தகுந்த உற்பத்தி...

'மெலனின்' என்ற நிறமி அதிகம் இருந்தால், தோலின் நிறம், அடர்த்தியாக (கறுப்பு, பிரவுன் போன்ற) இருக்கும். மெலனின் குறைவாக இருப்பவர்களுக்கு (மஞ்சள், பிங்க்) தோலின் நிறம் வெளிறி இருக்கும். மெலனின் அதிகம் இருந்தால், வைட்டமின், 'டி' உற்பத்தி மெதுவாக நடக்கும்.

இந்த குறைபாடு இருந்தால், வேறு என்ன பிரச்னைகள் வரும்?

நீரிழிவு, மன அழுத்தம், துாக்கமின்மை போன்ற பிரச்னைகள் இருப்பவர்களில், 10ல், ஐந்து பேருக்கு இக்குறைபாடு உள்ளது.

இதனால், 30 வயதிலேயே எலும்புகள் பலவீனமடைவது அதிகரித்து வருகிறது. குடல், மார்பக, பிராஸ்டேட் கேன்சர் இருப்பவர்களுக்கு, இந்தக் குறைபாடு இருப்பது, உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து இந்த குறைபாடு இருந்தால், 'டைப் 1, 2' நீரிழிவு வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். சூரிய ஒளியில் இருந்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் உள்ளது; ஆனால், கட்டுக்குள் இருக்கும் என்பது தான் உண்மை. தோலின் மேல் பகுதியில் உள்ள ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி செய்யும்.

மூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், வைட்டமின், 'டி' மிகவும் அவசியம்; முக்கியம். இக்குறைபாட்டால், பார்கின்சன்ஸ், அல்சைமர், மன அழுத்தம், மனப் பதற்றம் உட்பட, பல பிரச்னைகள் வரும்.

வைட்டமின், 'டி' இருந்தால், செரடோனின் ஹார்மோன் நன்றாக சுரக்கும்; நேர்மறையான எண்ணங்கள் வரும்; இரவில் ஆழ்ந்த துாக்கம் இருக்கும்; துாக்கத்தில் மட்டுமே சுரக்கும், மெலடோனின் ஹார்மோன், உடலின் உள் செயல்பாடுகளின் புதுப்பித்தலுக்கு அவசியம்.

அடிக்கடி சளி, இருமல் போன்ற மேல் சுவாச பாதையில் ஏற்படும் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்கள், கண்டிப்பாக, வைட்டமின், 'டி' பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

காசநோய், ருமடாய்டு ஆர்த்தரட்டீஸ் இருப்பவர்களுக்கு இக்குறைபாடு இருந்தால், ஆன்டிபயாடிக் மருந்துகளின் வீரியம், முழுமையாக உடம்பிற்குள் செல்லாது. இக்குறைபாட்டை சரி செய்யும் போது, விரைவாக குணம் பெறுவதைப் பார்க்கிறோம்.

இக்குறைபாட்டால் வரும் பொதுவான அறிகுறிகள் எவை?

அலுப்பு, உடல், தலைவலி, வறட்சி, எலும்பு, மூட்டுகளில் வலி, படிக்கட்டு ஏறும் போது, உட்கார்ந்து எழும் போது, நீண்ட துாரம் நடந்தால் அலுப்பு.

இந்த சத்து அதிகம் உள்ள உணவுகள் எது?

மீன் வகைகள், மீன் எண்ணெய், பசும் பால், முட்டை, காளான், ஆரஞ்சு பழம், பூசணி விதை, ஆளி விதை, சிறு தானியங்கள், சூரிய காந்தி விதை போன்றவற்றில், வைட்டமின், 'டி' உள்ளது.

எவ்வளவு நேரம் சூரிய ஒளி தேவை?

காலையில், 10:00 மணி வரை அல்லது மாலையில், 3:00 மணிக்கு மேல் சூரிய ஒளியில் இருப்பது அவசியம். கறுப்பு, பிரவுன் போன்ற அடர் நிற தோல் உடையவர்கள், குறைந்தது, 30 நிமிடங்களும், வெளிர் நிற தோல் இருப்பவர்கள், 15 நிமிடங்களும் இருக்க வேண்டும்.

சூரிய ஒளி உடலில் போதுமான அளவு படுவது ஒன்று தான், பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்க, நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் கவசம்.

'குறிப்பிட்ட நேரம் தினமும் வெயிலில் இருக்கிறேன்; ஆனாலும், இந்தக் குறைபாடு உள்ளது' என்று சொல்பவர்களுக்கு துாக்கமின்மை, மன அழுத்தம் இருக்கும். இதனால், வைட்டமின், 'டி' போதுமான உற்பத்தி இல்லாமல் போகலாம்.

டில்லியில் நடந்த சர்வதேச கருத்தரங்கில், 'இயற்கையான முறையில், இந்த சத்து நம் உடலுக்கு கிடைப்பது தான் ஆரோக்கியமானது; அதுதான் நிரந்தர தீர்வு' என்று நான் பேசிய போது, நவீன மருத்துவர்கள் பலரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. சிலர், நேரடியாகவே, 'சப்ளிமென்ட் பற்றி வலியுறுத்துங்கள்' என்று கூறினர்; இது எனக்கு மிகுந்த வருத்தமும், அதிர்ச்சியும் தந்தது.



டாக்டர் ஒய்.தீபா

'நேச்சுரோபதி' அரசு சித்த மருத்துவக் கல்லுாரி, சென்னை.

sakshaayaan@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us