கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! சுகாதாரமற்ற சூழல் இதயத்தை பாதிக்கும்!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! சுகாதாரமற்ற சூழல் இதயத்தை பாதிக்கும்!
PUBLISHED ON : நவ 19, 2017

திருத்தணி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த, 13 வயது அர்ச்சனாவை, எங்கள்
மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, அவள் சுவாசக் குழாயின் மேல் பகுதி, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது; இதன் காரணமாக, இதயத்தின் செயல்பாடு, வெறும், 15
சதவீதம் மட்டுமே இருந்தது. வைரஸ் தொற்றின் தாக்குதலால், சுவாசிப்பதற்கே மிகவும் சிரமப்பட்ட நிலையில் இருந்தாள்; நுரையீரல் முழுவதும் நீர் கோர்த்திருந்தது. அர்ச்சனா, உயிர் பிழைக்க வேண்டும் என்றால், இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வாக இருந்தது. உறுப்பு தானத்திற்காக பதிவு செய்திருந்தோம். இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்,
'இம்யூனோகுளோபுளின்' ஊசி உட்பட, ஆரம்ப கட்ட சிகிச்சைகளுக்கு, நானும், என் கேரள நண்பர்கள் சிலரும் நிதி உதவி செய்தோம். இந்த ஆரம்ப கட்ட சிகிச்சையால், அவளின் இதய
செயல்பாட்டில், முன்னேற்றம் இல்லை. அவசியமான மருத்துவ உதவிகளை செய்து கொண்டிருந்த சமயத்தில், வேலுாரைச் சேர்ந்த, 23 வயது இளைஞர் ஒருவர், சாலை விபத்தில், மூளைச்சாவு அடைந்து விட்டதாக தகவல் வந்தது. தனியார் மருத்துவமனை ஒன்றில், நர்சாக பணி செய்தவர் அவர். அவரின் இதயத்தை, சில வாரங்களுக்கு முன், திறந்த நிலை அறுவை சிகிச்சை மூலம், அர்ச்சனாவிற்கு பொருத்தினேன். அர்ச்சனாவின் அப்பா, கூலி வேலையும், அம்மா வீட்டு வேலையும் செய்பவர்கள். மிகவும் வறுமையான சூழலில், அவளின் குடும்பம் இருக்கிறது.
இது போன்ற இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு, 10 - 12 லட்சம் ரூபாய்
செலவாகும். இங்கும், வெளிநாடுகளில் இருக்கும் என் நண்பர்கள் உதவியுடன், அறுவை சிகிச்சை செய்தோம். அன்னிய உறுப்பை, நம் உடம்பு நிராகரிக்காமல் இருக்க, தொடர்ந்து, 'இம்யூனோ சப்ரசன்ட்' மருந்துகள் சாப்பிட வேண்டும். இவற்றின் விலை அதிகம் என்பதால்,
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், அர்ச்சனாவிற்கு உதவ,
அவள் குடும்பத்தினர் விண்ணப்பித்து இருந்தனர். 'இளைஞனின் இதயம், 13 வயது பெண்ணிற்கு பொருத்தும் போது, பிரச்னை இல்லையா?' என்ற சந்தேகம் வரலாம். தசைகளால் ஆன இதயத்தின் வேலை, ரத்தத்தை, 'பம்ப்' செய்வது தான். அதனால், எந்த பிரச்னையும் இல்லை.
அர்ச்சனாவால், இனி சாதாரண குழந்தையை போல வாழ முடியும். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டால், தன்னம்பிக்கையோடு, தைரியமாக,
எல்லாரையும் போல வாழ முடியும். பெங்களூரைச் சேர்ந்த,
ரீனா ராஜு, 2009ல், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து, இந்த ஆண்டு ஜூன் மாதம், ஸ்பெயினில் நடந்த, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தோருக்கான,
100 மீ., ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார்.
தற்போது, மீண்டும் பள்ளி செல்ல துவங்கி இருக்கும் அர்ச்சனா, டீச்சராகி, தன்னை போல, வறுமையான சூழலில் வளரும் குழந்தைகளுக்கு உதவ போவதாகக் கூறினாள்.
சுவாசக் குழாயின் மேல் பகுதியில், சாதாரணமாக ஏற்படும் வைரஸ் தொற்று, இதயத்தை
தீவிரமாக பாதிக்கலாம். சுகாதாரமற்ற, வறுமையான, பொருளாதார, சமூக சூழலில் வளரும் குழந்தைகளை, அதிகம் பாதிக்க, இது வாய்ப்பாக உள்ளது.
டாக்டர் கே.எம்.செரியன்
குழந்தைகள் இதய சிகிச்சை சிறப்பு நிபுணர், சென்னை.
drkmc@frontierlifeline.com

