கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: பாப்பாவுக்கும், தாத்தாவுக்கும் தடுப்பூசி!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: பாப்பாவுக்கும், தாத்தாவுக்கும் தடுப்பூசி!
PUBLISHED ON : ஏப் 29, 2018

'போலியோ தடுப்பு மருந்தை போலவே, வேறு சில உயிர்க்கொல்லி தொற்றுக்கான, தடுப்பு மருந்துகளையும் கட்டாய நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்' என, வலியுறுத்தி வருகிறோம்.
குழந்தைகள் இறப்பிற்கான காரணிகளில் முதலிடத்தில் இருப்பது, நிமோனியா. அதிலும், ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் பாதிப்பது அதிகம். பாக்டீரியா தொற்றால் இந்த நோய் ஏற்படுகிறது.
முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளாலும், தடுப்பூசி போடுவதாலும் முற்றிலும் தடுக்க முடியும்.
தமிழகத்தில், 10 சதவீதத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கே, நிமோனியா தடுப்பூசி போடப்படுகிறது.
உலகம் முழுவதும், 180 நாடுகளில், அரசே இலவசமாக போடுகிறது. 'போலியோ தடுப்பூசி போல, தொடர் நடவடிக்கையாக, நிமோனியா தடுப்பூசியை தர வேண்டும்' என, வலியுறுத்தினேன்.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், 'நேஷனல் ஹெல்த் மிஷன்' நிதி உதவியுடன், 2016ல் இதை மத்திய அரசு சேர்த்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 100 சதவீதம் நிமோனியா தடுப்பூசி குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை. 'நீண்ட நாட்கள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கேட்கும் சக்தியை இழந்த, காக்ளியார் இம்ப்பிளான்ட் செய்த குழந்தைகள், ரத்தப் புற்றுநோய் மற்றும் ரத்தசோகை பாதித்த குழந்தைகளுக்கு, நிமோனியா தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளோம்.
குழந்தை பிறந்த ஆறாவது, 10வது, 14வது வாரத்தில் மூன்று நிமோனியா தடுப்பூசியும், அதன்பின், 15 -18 மாதத்தில் ஒரு, 'பூஸ்டர் டோசும்' போட வேண்டும்.
குழந்தைகளை போலவே, வயதானோருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், நிமோனியா பாதிப்பு அதிகம் உள்ளது. எனவே, 50 வயதிற்கு மேற்பட்டோருக்கும், தடுப்பூசி போட வேண்டியது அவசியம்.
அரசு முதியோர் காப்பகங்களில் வசிப்போருக்கு, நேரடியாகச் சென்று, தடுப்பூசி போடும் முறையை, தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.
பல்வேறு உயிர்க்கொல்லி தொற்றுகளில் இருந்து, முறையான தடுப்பு மருந்து, குழந்தைகளை காக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
குறிப்பாக, தங்களை பாதிக்கும் தொற்றுகளால் ஏற்படும் அறிகுறிகள் வராமல் குழந்தைகளை பாதுகாக்கிறது.
நிமோனியா பாதித்தோர், 7 - 10 நாட்கள் கண்டிப்பாக மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். முழுமையாக குணமடைந்த பின் தான், மருத்துவமனையை விட்டுச் செல்ல வேண்டும்.
முழுமையாக குணமடையாமல், சிகிச்சையை பாதியில் நிறுத்தினால், நுரையீரலில் சீழ் கட்டி விடும்; அதன்பின், அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு.
நிமோனியாவில் இரண்டு வகை உள்ளது. நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ள குழந்தைகளை பாதிப்பது, முதலாவது. இப்படிப்பட்ட குழந்தைகள், மருத்துவமனைகள் உட்பட, நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்றால், தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இரண்டாவது, நுண்ணுயிரிகளால் ஏற்படுவது. நிமோனியாவிற்கு முக்கிய காரணம், ஊட்டச்சத்து குறைபாடு. குழந்தை பிறந்ததில் இருந்து, முறையாக தாய்ப்பால் கொடுத்தாலே, இந்த பிரச்னையை தவிர்க்க முடியும்.
டாக்டர் ஆர்.சோமசேகர்,
'டீன்' குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்,
அரசு மருத்துவக் கல்லுாரி, கன்னியாகுமரி.
drsomas2000@yahoo.com

