கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - இனிப்பாக மாறும் அபாயம்!
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - இனிப்பாக மாறும் அபாயம்!
PUBLISHED ON : ஏப் 21, 2019

இந்தியர்கள், 40 சதவீதம் பேர், சர்க்கரை கோளாறு வருவதற்கான அபாயத்தில் உள்ளனர். முறையான உடற்பயிற்சி செய்தால், சர்க்கரை கோளாறு வராமலேயே தடுக்கலாம்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, 'ஹெச்பிஏ1சி' பரிசோதனை செய்து, ரத்த சர்க்கரையின் அளவை தெரிந்து கொள்வது, எதிர்காலத்தில் சர்க்கரை கோளாறு வராமல் தடுத்துக் கொள்ள உதவும்.
இந்த பரிசோதனை செய்வதற்கு, சாப்பிடுவதற்கு முன், சாப்பிட்ட பின் என, எந்த நிபந்தனையும் கிடையாது; எந்த நேரத்திலும், ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இதில், ரத்த சர்க்கரையின் அளவு, 9 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால், பல உடல் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது, 6.5 சதவீதம் என்ற அளவிற்கு குறைவாக இருக்கும்படி கவனமாக இருந்தால், சர்க்கரை கோளாறால் வரும் உடல் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
அளவு, 5.7 - 6.4 சதவீதமாக இருந்தால், சர்க்கரை வருவதற்கான முந்தைய நிலையில் இருப்பதாக அர்த்தம். 40 சதவீதம் பேர், இந்த நிலையிலேயே உள்ளனர். இவர்கள், ஐந்து - ஏழு ஆண்டுகளில், சர்க்கரை நோயாளிகளாக மாறி விடுகின்றனர். இந்த அளவு இருப்பது உறுதியானதும், உணவு, உடற்பயிற்சியில் கவனமாக இருந்தால், சர்க்கரை வராமலேயே தவிர்க்க முடியும்.
இவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர், சர்க்கரை நோயாளிகளாக மாறி விடுகின்றனர். இது தான், ஒவ்வொரு ஐந்தாண்டிற்கும், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாவதற்கு காரணம்.
சர்க்கரை கோளாறு இல்லாத குடும்பப் பின்னணி இருந்தாலும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, இந்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
டாக்டர் என்.சுதர்சன்,
பொதுநல மருத்துவர், சென்னை.
மொபைல்: 98948 41948
