தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! கை, கால், வாய்... வைரஸ்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! கை, கால், வாய்... வைரஸ்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! கை, கால், வாய்... வைரஸ்!


PUBLISHED ON : டிச 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



சமீப நாட்களாக, குழந்தைகளுக்கு கை, கால்களில் சிறிய கொப்புளங்களோடு, காய்ச்சல் வருவது அதிகரித்து உள்ளது. தினமும் குறைந்தது, இரு குழந்தைகள் இந்த பிரச்னைகளோடு என்னிடம் வருகின்றனர். இதற்கு, 'ஹேண்ட், புட், மவுத் டிசீஸ்' என, பெயர். வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் இந்தப் பிரச்னை வருகிறது. 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை, இந்த வைரஸ் அதிகம் பாதிக்கிறது. அறிகுறிகளைப் பார்த்து, டெங்குவாக இருக்குமோ, அம்மையாக இருக்கலாமோ என, பெற்றோர் அஞ்சுகின்றனர்; இன்னும் சில பெற்றோர், 'வழக்கமான உணவைத் தான் கொடுத்தோம்; குழந்தைக்கு ஏதோ, 'அலர்ஜி' போல இருக்கிறது' எனச் சொல்கின்றனர்.

இந்த வைரஸ் தாக்குவதால் ஏற்படும் அறிகுறிகளுக்கும், டெங்கு, அம்மை நோயின் அறிகுறிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. டெங்கு வந்தால், காய்ச்சல் அதிகமாக இருக்கும்.

இரண்டு, மூன்று நாட்களில் காய்ச்சல் சட்டென்று குறைந்து, குளிர் ஜுரம் போல நடுக்கம் வரலாம். தட்டணுக்கள் குறைவதால், சிவப்புத் திட்டுக்கள் தோன்றும்; அலர்ஜியாக இருந்தால், தாங்க முடியாத அரிப்பு ஏற்படும். அம்மை பாதிப்பு வந்தால், வயிறு, முதுகு, பின்பக்கங்களில் கொப்புளங்கள் வரும். ஆனால், குறிப்பிட்ட இந்த வைரஸ் தாக்குவதால், முதலில் கால்

பாதங்களில் தடிப்புகள் ஏற்பட்டு, தொடைகள் வரை பரவும். அதேபோல, உள்ளங்கையில் ஏற்படும் தடிப்புகள், முழங்கை வரை பரவும்; வாயிலும் கொப்புளங்கள் ஏற்படும். முதல் இரண்டு நாட்கள், லேசான காய்ச்சல் இருக்கும்.

மருந்து கொடுத்தாலும், ஏழு முதல், 10 நாட்களுக்கு பிரச்னை இருக்கும். வாய்ப்புண், மூன்று நாட்கள் இருக்கும். கை, கால்களில் லேசான அரிப்பு வரலாம். பள்ளி செல்லும் குழந்தைகளை, 'ஹேண்ட், புட், மவுத் டிசீஸ்' அதிகம் பாதிக்கிறது. வகுப்புகளில், குழந்தைகள் நெருக்கமாக அமர்வது, டாய்லெட் பயன்படுத்திய பின், கைகளை சுத்தம் செய்யாமல் இருப்பது போன்ற அடிப்படை சுகாதாரம் இல்லாமை, ஒரு காரணம். இந்த வைரஸ், மிக வேகமாகப் பரவக் கூடியது. எனவே, வகுப்பில் ஒரு குழந்தைக்கு வந்தால், அடுத்தடுத்த குழந்தைக்கும் பரவும். பாதிக்கப்பட்ட குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பது நல்லது. காற்றின் மூலம் பரவக்கூடியது என்பதால், இருமல், தும்மல் வரும் போது, வாயையும், மூக்கையும், சுத்தமான துணியால் மூடிக் கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டியதன் அவசியத்தை, குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

வாயில் புண் வருவதால், குழந்தையால் சாப்பிட முடியாது. காரம், புளிப்பை தவிர்த்து, கஞ்சி, ராகி கூழ் மாதிரியான உணவுகளை, இளஞ்சூடாகத் தர வேண்டும்.

உடலில் நீர்ச் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, இந்த வைரசின் தாக்கம், குளிர் காலத்தில் இருக்காது; ஆனால், இந்த ஆண்டு குளிர் காலத்திலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும், மழைக் காலத்தில் அரிசி, கோதுமை போன்ற தானியங்களை

மட்டுமே குழந்தைகளுக்கு சாப்பிடத் தருகின்றனர். குளிர், மழை என்பதால், பழம், சில வகை காய்கறிகள் சளி பிரச்னையை ஏற்படுத்தும் என, தவறாக நினைத்து, தவிர்க்கின்றனர்.

தயிர், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவதால், சளி பிடிக்காது. அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். வைட்டமின், 'டி' குறைபாடு இருந்தாலும், குழந்தையை இந்த வைரஸ் தாக்கும். அதனால், தினமும் குறைந்தது ஒரு மணி நேரம், சூரிய ஒளியில் விளையாட அனுமதிக்க வேண்டும்.

டாக்டர் தீபா ஹரிஹரன்

குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், சென்னை.

nicu_deepa@yahoo.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us