கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - மீண்டும், 'மெட்ராஸ் ஐ!'
கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - மீண்டும், 'மெட்ராஸ் ஐ!'
PUBLISHED ON : அக் 13, 2019

கடந்த சில வாரங்களாக, 'மெட்ராஸ் ஐ' பாதிப்பை, அதிக அளவில் பார்க்க முடிகிறது. 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பை போலவே, இதிலும், அதிக அளவில் பாதிக்கப்படுவது, குழந்தைகளாகவே இருக்கின்றனர். மழைக் காலம் துவங்கி, லேசாக குளிர ஆரம்பிக்கும் பருவத்தில், ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட வகை வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள், கண்களை பாதிக்கின்றன. தினமும் மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகளில், 20 சதவீதம் பேர், மெட்ராஸ் ஐ பாதிப்பிற்கு உள்ளாவதைப் பார்க்க முடிகிறது.
கண்களை பாதிக்கும் இது, பருவ காலங்களில் ஏற்படும் சாதாரண வைரஸ் தொற்று. கண்களின் மேல்புறத்தில் பாதுகாப்பாக உள்ள மெல்லிய அடுக்கை, இந்த தொற்று பாதிக்கிறது.
பூக்களில் உள்ள மகரந்த துாள், துாசிகளாலும் தொற்று ஏற்படலாம். முறையாக கண்டுபிடித்து, சரியான சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், தீவிர பிரச்னையாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எனவே, மருத்துவ ஆலோசனை இல்லாமல், நாமாகவே மருந்துகளை வாங்கி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.தொண்ணுாறு சதவீதம் பேருக்கு, அடினோ வைரசால் இந்த பாதிப்பு ஏற்படும். கண்கள் சிவந்து போவது, நீர் வடிவது, அரிப்பு, எரிச்சல், பிசுபிசுப்பான திரவம் வடிவது ஆகியவை பொதுவான அறிகுறிகள்.
கருவிழியின் மேல், வெள்ளை நிற திட்டுகள் தோன்றி, பார்வையை மறைக்கலாம்; ஒரு கண்ணில் வந்த தொற்று, மற்ற கண்ணுக்கும் எளிதாக பரவலாம். மெட்ராஸ் ஐ பாதிப்பிற்கு தாங்களாகவே மருந்து எடுத்து, நிலைமை மோசமான பின், ஆலோசனைக்கு வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள், ஆன்டி பயாடிக் மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
இது, வைரஸ் தொற்று என்பதால், ஆன்டி பயாடிக் மருந்துகளால், எந்த பலனும் இல்லை. சில நேரங்களில், இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்று ஏற்படலாம்.
அந்த சமயத்தில், ஏற்கனவே இதற்கான மருந்து பயன்படுத்தி இருந்தால், அதைக் காட்டிலும் வீரியம் மிக்க மருந்துகளை தர வேண்டியுள்ளது. இது எளிதாக, விரைவில் பரவக் கூடிய தொற்று. மெட்ராஸ் ஐயால் பாதிக்கப்பட்ட கண்களை நேராகப் பார்ப்பதால் பரவாது; ஆனால், பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களை தொடுவது, துண்டு, மேக் அப் பொருட்களை பயன்படுத்துவது போன்றவற்றால் எளிதாகப் பரவும்.
எனவே, பாதித்தவர், வீட்டில், அலுவலகத்தில், பள்ளியில் என, மற்றவர்களிடம் நெருங்காமல், தனியாக இருக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவி, சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். 'கான்டாக்ட்' லென்ஸ் பயன்படுத்துபவர்கள், டாக்டரின் ஆலோசனையுடன், தொற்று சரியான பின், பழைய லென்சுகளை பயன்படுத்தக் கூடாது.
கண்களில் வழியும் நீர் நிற்கும் வரை, மற்றவர்களின் அருகில் செல்லாமல், கவனமாக இருப்பது நல்லது.
டாக்டர் எஸ்.சவுந்தரி
தலைவர், மருத்துவ சேவை,
அகர்வால் கண் மருத்துவமனை, சென்னை.
