sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: நோயாளிகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

/

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: நோயாளிகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: நோயாளிகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: நோயாளிகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்!


PUBLISHED ON : அக் 15, 2017

Google News

PUBLISHED ON : அக் 15, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!

'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் துவங்கி, நவம்பர் வரை, டெங்குவின் பாதிப்பு இருக்கும். இந்த ஆண்டு மே மாதத்தில், சில நாட்கள் மழை பெய்ததைத் தொடர்ந்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, வழக்கத்தை விடவும் அதிகமாகி விட்டது. வழக்கமாக, டெங்கு பரவும் மாதங்களில், கட்டுப்படுத்தத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை, மே மாதத்திலேயே, தமிழக அரசு எடுத்திருக்க வேண்டும். 'டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள், சுத்தமான நீரில் தான் முட்டையிடும். அதனால், வீட்டில், நீர் சேமிக்கும் தொட்டிகள், பாத்திரங்களை மூட வேண்டும். டயர், சிரட்டை போன்றவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சுற்றுப்புறத்தில் குப்பை சேர விடக் கூடாது' என்பதெல்லாம் சரிதான். ஆனால், மழை பெய்து தெருக்களில், ஆங்காங்கே நீர் தேங்கும் போது, பெரும்பாலான இடங்களில், சுத்தமான நீர் தான் உள்ளது. உடனடியாக மழை நீர் வடிய, மாநகராட்சி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சென்னையில், பல இடங்களில், குப்பை அகற்றப்படாமல் கிடக்கிறது.இது போன்ற, அதிக அளவு தொற்று நோய் பரவும் காலங்களில், மாநகராட்சியினர், கொசுக்களைக் கட்டுப்படுத்த, பைரெத்ரின் மருந்தை, கெரசின் கலந்து, வாரம் இருமுறை அடிப்பர். இப்போது, பெரும்பாலான இடங்களில், கொசு மருந்தே அடிப்பதில்லை. அடிக்கும் ஒருசில இடங்களிலும், வெறும் கெரசின் மட்டுமே அடிப்பதாக, மாநகராட்சி ஊழியர்கள் பலர், என்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கின்றனர். அதுவும் எவ்வளவு தேவையோ, அந்த அளவு அடிப்பதில்லை. உதாரணமாக, கெரசின் கலந்த மருந்து, ஒரு கிலோ மீட்டருக்கு, ஒரு லிட்டர் அடிக்க வேண்டும் என்றால், அதை, 16 கிலோ மீட்டருக்கு அடிப்பதாக, மாநகராட்சி ஊழியர்கள் கூறுகின்றனர். இந்த அளவிற்கு மோசமாக இருந்தால், கொசுக்களை எப்படி கட்டுப்படுத்த முடியும்?சில வாரங்களுக்கு முன், எனக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில், 'அட்மிட்' ஆனேன். 'வென்டிலேட்டர்' உதவி தேவைப்படும் அளவிற்கு நிலைமை மோசமானது; மறுபிறவி எடுத்து வந்தது போல, தற்போது உணர்கிறேன்.தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம், டெங்கு பாதிப்பை, மாநகராட்சியிடம் தெரிவித்தேன். காரணம், ஓர் ஏரியாவில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தாலும், அந்த ஏரியா முழுவதும் கொசு மருந்து அடிப்பதோடு, அக்கம் பக்கத்தில் இருப்போரிடம், 'உங்கள் ஏரியாவில் ஒருவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளது. முன்னெச்சரிக்கையோடு இருங்கள்' என, தகவல் தர வேண்டும். ஆனால், நான் தகவல் தந்த பின்னும் கூட, எங்கள் வீடு இருக்கும் பகுதியில் மருந்தும் அடிக்கவில்லை; ஒரு விழிப்புணர்வும் செய்யவில்லை. ஒரு டாக்டரான எனக்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் கதி என்னவென, சிந்தித்துப் பாருங்கள்!

அரசு மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பிற்கு ஏற்ப, போதுமான அளவு படுக்கை வசதிகள் இல்லை. உள் நோயாளிகளாக சிகிச்சை செய்யப்பட வேண்டிய பலரை, புற நோயாளிகளாக வைத்தே, சிகிச்சை தந்து அனுப்பி விடுகின்றனர். நோய் தொற்று பாதிப்பு கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம், அனைத்து வசதிகளுடன் இருக்கும் தனியார் மருத்துவமனைகளை கண்டறிந்து, படுக்கை வசதி தர இயலாத நோயாளிகளை அங்கு, 'அட்மிட்' செய்யலாம். தற்போது, காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்து விட்டன. பள்ளி, அதன் சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டியது, மாநகராட்சி மற்றும் பள்ளி நிர்வாகத்தின் கடமை. இன்னொரு விஷயம், எல்லா இடங்களிலும் நிலவேம்பு கஷாயம் தருவதாக சொல்லப்படுகிறது. நிலவேம்பு கஷாயம் குடிப்பது, ஒரு, 'சப்போர்ட்டிங் சிஸ்டம்' மட்டுமே. இதைக் குடித்தால், டெங்கு வராது என்பதற்கு, அறிவியல் பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை. 'அறிகுறிகளின் அடிப்படை யில் தான், நாங்களும் சிகிச்சை தருகிறோம்' என்றாலும், டாக்டரின் நேரடி கண்காணிப்பில், தேவையான மருத்துவ உதவி, உடனடியாகக் கிடைப்பது அவசியம். இனியாவது, அவசர கால நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். சுகாதாரத் துறையில் அரசியல் செய்து கொண்டிருந்தால், நிலைமை இன்னும் மோசமாகலாம்.

டாக்டர் என்.எஸ்.கனிமொழி, பொது மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர், சென்னை. drmozhi18@gmail.com






      Dinamalar
      Follow us