PUBLISHED ON : ஆக 03, 2016

ஏப்ரல் 20, -2016
மார்ச் மாதம் 25 ஆம் தேதி, காலை, 7:00 மணியளவில், ஒருவர் தொலைபேசியில் என்னை அழைத்தார். பெயர் வீரப்பன் என்றும், திண்டிவனத்தை சேர்ந்த விவசாயி என்றும், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். என்னை சந்திக்க வேண்டும் என்றார். அன்றைய தினமே நேரில் வரச்சொன்னேன்.
அன்று மாலை வந்தவர், 'தினமலர் - நலம்' பகுதியில் வெளிவந்துள்ள, என்னுடைய மருத்துவ கட்டுரையைக் காண்பித்து, 'இதைப் படித்த உடனேயே, உங்களைத் தொடர்பு கொண்டேன். ஜனவரி மாதத்திலிருந்து எனக்கு தொடர் காய்ச்சல் உள்ளது. அதற்காக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். 'சிகிச்சையில் திருப்தி இல்லை. காய்ச்சல் குணமாகவில்லை. அதன்பின் சில பரிசோதனைகளை செய்ததில், இதயத்தில் நோய்த் தொற்று உள்ளது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்' என்றார்.'எடை குறைந்து, பசியின்மையோடு களைப்பும் இருக்கிறது' என்றார். அவருக்கு மூச்சுத்திணறல் இருந்ததால், முதலில் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சில மருத்துவ பரிசோதனைகளை செய்ததில், இடது பக்கமுள்ள அயோடிக் வால்வில் (Aortic valve) நோய்த் தொற்று இருந்ததோடு, சீழ் மற்றும் நீர்க் கட்டியும் இருந்தது தெரிந்தது.
இந்தத் தொற்றின் பாதிப்பு வலதுபக்கமுள்ள 'டிரைக்கஸ்ப்பிட்' எனும் வால்விலும் பரவி இருந்தது. திறந்தநிலை அறுவை சிகிச்சையில் அயோடிக் வால்வை அகற்றி, செயற்கை வால்வை பொருத்தினோம். 'டிரைக்கஸ்ப்பிட்' வால்வில் உள்ள நீர்க்கட்டியை அகற்றி, பாதிக்கப்பட்ட இடத்தை ரிப்பேர் செய்தோம். இதுபோன்று இருந்த மேலும் சில நீர்க்கட்டிகளை அகற்றியதில், எங்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. கட்டியை அகற்றியதால், அந்த இடத்தில், பெரிய ஓட்டை இருந்தது. அவரின் இதயத்துக்கு மேலிருக்கும் பெரிகாடியம் எனும் திசுவை எடுத்து ஓட்டை இருந்த இடத்தில் வைத்து சரி செய்தோம். இதுபோன்ற சமயத்தில் செயற்கை திசுவை பொருத்துவதை விடவும், உடலிலிருந்து எடுக்கப்படும் திசுவை பயன்படுத்துவதே நல்லது. காரணம் மீண்டும் நோய்த் தொற்று உருவாக வாய்ப்பு இருக்காது. அறுவை சிகிச்சை முடிந்து ஒரு வாரத்தில் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஒரு மாதம் கழித்து மருத்துவமனைக்கு வந்து, ஆன்டிபயாடிக் ஊசிகளை போட்டுக் கொண்டார். சில வாரத்திற்கு பின், என்னை தொடர்பு கொண்டு, விவசாயத்தை ஆரம்பித்து விட்டதாக கூறியவர், என் உயிரை காப்பாற்ற உதவியதற்காக, 'தினமலர்' நாளிதழுக்கும், எனக்கும் நன்றி கூறுவதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.
டாக்டர் எம்.எம்.யூசுப்
நுண்துளை இதய அறுவை சிகிச்சை நிபுணர்,
சென்னை.
82206 69911
