PUBLISHED ON : நவ 16, 2016

நவ., 4, 2016: விற்பனை பிரதிநிதியாக பணி செய்யும், 55 வயது சீனிவாசன், வழக்கம் போல, கள பணியில் இருந்தபோது, திடீரென நெஞ்சுவலி வந்ததால், அருகில் இருந்த மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். 'எக்ஸ் ரே' எடுத்ததில் நெஞ்சுப் பகுதியில், சற்றே பெரிய கரும்புள்ளி இருப்பது தெரிந்தது. நிழல் போல தெளிவில்லாமல் இருந்த அந்த இடத்தில், என்ன பிரச்னை என்பதை தெளிவாக உணர முடியவில்லை. அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்பது, சி.டி., ஸ்கேனில் தெரியலாம் என்பதால் எடுத்திருக்கின்றனர். அதுவும் தெளிவாக இல்லாத நிலையில், குறிப்பிட்ட இடத்தில் இருந்த சதையை எடுத்து, 'பயாப்ஸி' பரிசோதனை செய்ததில், அது அபூர்வமாக வரக்கூடிய, ஒரு கட்டி என்பது தெரிந்திருக்கிறது.என்னிடம் அழைத்து வந்தனர். 'ஆஞ்சியோகிராம்' செய்ததில், அவரின் இதய ரத்தக் குழாய்களில், லேசான அடைப்பு இருந்தது. இதை எப்படி கையாளலாம் என, நான் உட்பட, பல்வேறு துறையைச் சேர்ந்த டாக்டர்கள் குழு விவாதித்தோம். முதலில், 'பைபாஸ்' அறுவை சிகிச்சையில், ரத்த குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கிவிட்டு, அதன்பின், கட்டியை அகற்ற, இன்னொரு அறுவை சிகிச்சை செய்யலாம் என, முடிவானது. முதலில், அவர் ரத்தக் குழாய்களில் இருந்த, 3 அடைப்புகளை நீக்கிவிட்டு, ஐந்தாவது நாள் வீட்டிற்கு அனுப்பிவிட்டோம். அடுத்த, 3 மாதங்கள், தொடர் கண்காணிப்பில், அவர் முழுமையாக குணம் அடைந்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே திட்டமிட்டபடி, கட்டியும் அகற்றப்பட்டது.கட்டியை அகற்றுவது தான், சவாலான விஷயமாக இருந்தது. மார்பு பகுதியின் பக்கவாட்டில் துளையிட்டு, கவனமாக எடுக்க வேண்டியிருந்தது. காரணம், மார்பெலும்பை ஒட்டியிருந்த கட்டி, முதுகெலும்பு வரை பரவியிருந்தது.
கட்டி முழுவதையும் அகற்றிய பின், ஒரு வாரத்தில் வீட்டிற்கு அனுப்பி விட்டோம். கடந்த ஓராண்டாக செய்யப்படும் தொடர் பரிசோதனையில், அவர் பூரண நலமுடன் இருக்கிறார். மனைவி மற்றும் இரு மகள்கள் இருக்கும் சீனிவாசனுக்கு, கடந்த, 30 ஆண்டுகளாக புகைப் பழக்கம் உள்ளது. இந்த கட்டிக்கும் அதுதான் காரணம்.
சஞ்சய் செரியன்,
பிரண்டியர் லைப் லைன் மருத்துவமனை
044 - 4201 7575
