PUBLISHED ON : ஆக 23, 2015
பொதுவாக வாழைப்பழத்தை அதிகமாக உண்பதால், உடம்பை வெளுக்கச் செய்யும். சருமரோகம், பித்தபிணிகள், மலச்சிக்கல் தீரும். ரஸ்தாளி பழம் நாவிற்கு இதமாக இருக்கும்.
கருவாழைப்பழம் பித்தத்தைப் போக்கும். மொந்தன் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் பித்தம், வறட்சி முதலிய நோய்கள் நீங்கும்.
வெள்ளை வாழைப்பழம் சுவையுள்ளதாக இருக்கும். கதலி வாழைப்பழம் இனிப்புடன் சற்று புளிப்பு ருசியுடையதாக இருப்பதால், நாவிற்கு தனிச்சுவை அளிக்கிறது. இதனைக் கதலி என்பர். அடுக்கு வாழைப்பழம் தேகக்காந்தியை உண்டாக்கும்.
பச்சை வாழைப்பழம் தேகத்தின் உஷ்ணத்தையும், பித்தத்தையும், மலபந்தத்தையும் நீக்கும். மலை வாழைப்பழம் சோகை ரோகம், மலபந்தம் முதலியவற்றை குணப்படுத்தும் இயல்புடையது.
பேயன் வாழைப்பழத்தை உட்கொள்ளுவதால் உட்சூடு நீங்கும். உடலில் குளிர்ச்சி உண்டாகும். மேலும் மலமிளக்கமும் ஏற்படும்.
வாழைப்பழத்தில் நியாசின் என்ற சத்துப் பொருள் கொஞ்சம் உண்டு. தியாமின், ரிபோப்ளேவின் என்ற சத்துப்பொருள்கள், மிகுதியாகக் காணப்படுகின்றன. ஒரு வாழைப்பழத்தில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, உலோகச் சத்து, சுண்ணாம்பு, இரும்பு, சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், செம்பு, கந்தகம், குளோரின் ஆகிய சத்து பொருள்கள் அடங்கியுள்ளன.
வாழைப்பூ, காய், தண்டு முதலியன சமையலுக்கு பயன்படுகின்றன. அவை மருந்தாகவும் உபயோகப்படுத்தப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள், வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவது நல்லது.
