PUBLISHED ON : நவ 15, 2020

குழந்தை பிறந்த ஆறு மாதம் - 6 வயது வரை முளைப்பவை பால் பற்கள். பால் பற்களை முறையாக பராமரித்தால் தான், அவை விழுந்து, நிரந்தர பற்கள் முளைக்கும் போது, ஆயுள் முழுதும் நிரந்தரப் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
உணவு பழக்கம், வாழ்க்கை முறை, இவை இரண்டையும் பிறந்த ஆறு மாதங்களில் இருந்தே குழந்தைக்கு பழக்கினால் மட்டுமே இதை செய்ய முடியும். காரணம், தற்போது 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பல் சொத்தையால் பாதிக்கப்படுவது மிக சகஜமான ஒன்றாகி விட்டது.
திட உணவு கொடுக்க துவங்கியதில் இருந்தே, சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளையே குழந்தைக்கு தருவது, கேட்கும் பொழுதெல்லாம் சாக்லேட், பிஸ்கட் சாப்பிடக் கொடுப்பது இதற்கு முக்கிய காரணம். புட்டிப் பாலிலும் தேவைக்கு அதிகமாகவே சர்க்கரை கலந்து கொடுக்கின்றனர்.
தாய்ப்பால் கொடுத்தபடி குழந்தையை துாங்கச் செய்வது, பால் பாட்டிலை வாயில் வைத்து சப்பியபடி துாங்குவது, இந்த இரண்டும் பல் சொத்தை ஏற்படுத்துவதில் பிரதானமாக இருப்பதால், அவசியம் இந்த பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.
'ரூட் கேனால்' சிகிச்சை
தொடர்ந்து இது போன்று இருந்தால், பால் பற்கள் அனைத்திலும் சொத்தை ஏற்பட்டு, 2 வயதாகும் போது ஒரு பல்கூட மிஞ்சாது. சொத்தையால், பற்களின் நிறம் மாறி, கறுப்பாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. நிரந்தர பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் போது தான், பிரச்னை இருப்பது தெரிய வரும்.
பல்லில் சொத்தை அதிகம் இருந்தால், பல்லை எடுத்து விட்டு, அந்த இடத்தில் பெரியவர்களுக்கு செய்வது போன்று, 'ரூட் கேனால்' சிகிச்சையில், ஈறுகளின் உள்ளே, பல்லின் அடிப்பகுதியில், சொத்தை ஏற்பட்ட பகுதியை சரிசெய்து, அந்த இடத்தில், 'கேப்' போட வேண்டும். காரணம், சொத்தை இருந்த பல்லை, 2 வயதில் எடுத்து விட்டால், அந்த இடத்தில் நிரந்தரமான பல், 6 வயதில் தான் முளைக்க ஆரம்பிக்கும்.
அதுவரையிலும் அந்த இடம் இடைவெளியுடன் இருந்தால், பக்கத்தில் வளர வேண்டிய பல், இந்த இடத்தில் இடம் மாறி முளைப்பதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆறு மாதத்தில் துவங்கி, 12 வயது வரை, ஒவ்வொரு பல்லும் குறிப்பிட்ட வயதில் விழுந்து, அந்த இடத்தில் நிரந்தரப் பற்கள் முளைப்பது நடக்கும். எந்த வயதில் எந்தப் பல் விழ வேண்டுமோ, அந்த வயதில் தான் விழ வேண்டும். பல்லை எடுப்பதும், அது விழ வேண்டிய வயதில் தான் எடுக்க வேண்டும். முன்போ, பின்போ எடுக்கக் கூடாது.
சொத்தை பல்லை, இயல்பாக விழ வேண்டிய வயதிற்கு முன் எடுத்து, அந்த இடத்தை அப்படியே விட்டால், பக்கத்தில் இருக்கும் பல், இடம் மாறி, அந்த இடத்திற்கு வந்து விடலாம். இதனால், சீரான வரிசையில் பற்கள் இல்லாமல் இருப்பது, முன் பக்கம் துாக்கலாக முளைப்பது, ஒரு பல் மேல் இன்னொரு பல் முளைப்பது போன்ற பிரச்னைகள் வரலாம்.
பால் பற்கள் இருக்கும் போதே, பல் சொத்தை இல்லாமல், ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால், எந்தப் பிரச்னையும் இல்லாமல், எப்போது விழ வேண்டுமோ, அந்த சரியான நேரத்தில் பல் விழுந்து நிரந்தரப் பல் முளைக்கும்.
இது தவிர, குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம், உதடு கடிப்பது, வாயால் மூச்சு விடுவது, விரல் சப்புவது போன்ற பழக்கங்கள் இருந்தால், தெத்து பல், சுவாசப் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. விரல் சப்பும் பழக்கம் இருந்தால், 2 வயதிற்குள் அந்தப் பழக்கத்தில் இருந்து குழந்தையை மாற்றிவிட வேண்டும்.
பல் பராமரிப்பு
குழந்தைக்கு பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் முன்னதாகவே, ஈறுகளை சுத்தம் செய்வது முக்கியம். காலையில் எழுந்ததும், குழந்தையை பராமரிப்பவர்கள், தங்கள் கைகளை சுத்தமாக கழுவிய பின், மென்மையாக ஈறுகளை மசாஜ் செய்து, ஒரு மிடறு தண்ணீர் குடிக்க தர வேண்டும். இரவில் தரும் பாலில் சர்க்கரை அளவை குறைவாக தரலாம்.
பிரஷ் செய்ய முடியாத வயதில் இருக்கும் குழந்தைக்கு, இரவில் பால் குடித்த பின், ஒரு மிடறு தண்ணீர் குடிக்க தருவது, பாலில் உள்ள சர்க்கரை பற்களில் தங்கி, சொத்தை ஏற்படுத்துவதை தவிர்க்கலாம். பற்கள் முளைக்க துவங்கியதும், விரல்களில் பொருத்தக் கூடிய டூத் பிரஷ்கள் உதவியுடன் பற்களை சுத்தம் செய்யலாம். பற்கள் தவிர, ஈறுகள், நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும்.
வளரும் குழந்தைகளுக்கு சாக்லேட், கேக், போன்ற அதிக சர்க்கரை உள்ள உணவுகளை தருவதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத தருணங்களில் சாக்லேட் அல்லது பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடத் தந்தால், சாப்பிட்டு முடித்ததும், கேரட் போன்ற பச்சை காய்கறிகளை கடித்து சாப்பிடச் சொல்லலாம். இதனால், பல் இடுக்குகளில் உள்ள படிமம் சுத்தமாகிவிடும்.
நிரந்தரப் பற்கள் முளைக்கும் வரை கடினமான உணவுகளை கொடுப்பதை தவிர்க்கலாம். அசைவம் சாப்பிடும் குழந்தைக்கு, மீன் போன்ற அதிகம் எலும்பு இல்லாதவற்றை மட்டும் தரலாம். ஆறு மாதம் அல்லது ஆண்டிற்கு ஒரு முறை பல் டாக்டரிடம் காட்டி, சொத்தை இருந்தால், தேவையான சிகிச்சையை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
டாக்டர் கவுரி விஜய்
பல் மருத்துவ ஆலோசகர், துாத்துக்குடி
86681 97244
