தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/மும்பையைத் தொடர்ந்து தமிழகத்திலும் வரும் வாய்ப்பு!

மும்பையைத் தொடர்ந்து தமிழகத்திலும் வரும் வாய்ப்பு!

மும்பையைத் தொடர்ந்து தமிழகத்திலும் வரும் வாய்ப்பு!


PUBLISHED ON : ஜூலை 22, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், இதய செல்கள் செயலிழப்பதால், 'ஹார்ட் அட்டாக்' வருவதைப் போன்ற நிலை, இடுப்பு எலும்பு மூட்டில் ஏற்படுவது, 'ஏ - வாஸ்குலார் நெக்ரோசிஸ்' எனப்படும். ரத்த ஓட்டம் இல்லாமல், எலும்பு திசுக்கள் செயலிழக்கும் நிலை இது.

கொரோனா தொற்று பாதித்து குணமான பின், கடந்தாண்டு சீனாவிலும், இரண்டாம் அலை வைரஸ் பாதிப்புக்கு பின், மும்பை, டில்லியில் சிலரும் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்திலும் இந்த பாதிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம். கொரோனா தொற்றால் புதிதாக வந்த பிரச்னை இல்லை இது. வைரஸ் பாதிப்பிற்கு பின், இந்த நிலை வருவது தான் புதிது.

கொரோனா குணமான ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கழித்தும் சிலருக்கு ஹார்ட் அட்டாக், பலருக்கு செரிமான மண்டல பிரச்னைகள் வருகின்றன. இதய செயலிழப்பு, பல நேரங்களில் இறப்பை ஏற்படுத்துகிறது.

கொரோனா பாதிப்பிற்கு உயிர் காக்க பயன்படும் அதிக 'டோஸ்' ஸ்டிராய்டு மாத்திரைகள், பிரச்னைக்கு ஒரு காரணம். வைரஸ் தொற்று, சிறு ரத்த நாளங்களில் ஏற்படுத்தும் அடைப்பு இன்னொரு காரணம்.

கொரோனாவில் இருந்து குணம் பெற்ற பின், இதுவரை எந்தப் பிரச்னையும் ஏற்படாத மூட்டுகளில் வலி ஏற்பட்டால், உடனடியாக கவனிக்க வேண்டும். வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டு, அலட்சியமாக இருந்தால், மூட்டு திசுக்களில் ரத்த ஓட்டம் இல்லாமல் செயலிழக்கும் அபாயம் வரலாம்; எலும்பு மொத்தமும் தேய்ந்து விடலாம்.

'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' எடுத்தால், எந்த நிலையில் பிரச்னை இருக்கிறது என்பது தெரிந்து விடும். முதல் இரண்டு நிலைகளில் இருந்தால், மாத்திரை, மருந்துகளில் சரி செய்து விடலாம்.

தீவிர நிலைகளான அடுத்த இரண்டு நிலைகள் என்றால், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்வது ஒன்று தான் தீர்வு.

நாற்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது, அடுத்த 15 ஆண்டுகளுக்கு பிரச்னை இருக்காது. அதன் பின், மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வரும்.

கொரோனா தொற்று வந்த அனைவருக்கும் இப்பிரச்னை வருவதில்லை. சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நீண்ட கால உடல் பிரச்னைகள் இருந்து, தீவிர தொற்று ஏற்பட்டவர்களுக்கு மட்டுமே எலும்பு திசு செயலிழப்பு வருகிறது.

இதைத் தவிர்க்கவே, நோய் தொற்று குணமான பின், ரத்த பரிசோதனை செய்து, தேவைப்படுபவர்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் வரை, ரத்த உறைவைத் தடுக்கும் மாத்திரைகளை தருகிறோம்.

டாக்டர் எஸ்.செந்தில் குமார்,

எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்,

தி இந்து மிஷன் மருத்துவமனை,

தாம்பரம்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us