PUBLISHED ON : ஜூலை 13, 2014

காலை நேரங்களில், ஆஸ்துமா தொந்தரவு அதிகமாக காணப்படுகிறது. இதற்கு, இரவு 10:00 மணியளவில் இன்ஹேலர்களும், 12 மணி நேரம் வரை வேலை செய்யக்கூடிய, 'பிராங்கோ டைலேட்டர்' மாத்திரைகளும் எடுத்துக் கொண்டால் இப்பிரச்னையில் இருந்து, நோயாளிகள் தங்களை பாதுகாக்க இயலும்
அதிகாலை நேரத்தில் தான் ஆஸ்துமா தொந்தரவு அதிகம் ஏற்படும் என்று கூறுவது சரியா? இதற்கு என்ன காரணம்?
பொதுவாகவே, பகல் - இரவு நேரங்களில், நம் உடலில் உள்ள ஹார்மோன்களில், நிறைய மாற்றங்கள் நிகழும். மூச்சுக்குழாய் சுருங்காமல் நன்றாக இருக்கப் பயன்படும் ஹார்மோன்கள், இந்த சுழற்சியால், அதிகாலையில் குறைவாக இருக்கும். அட்ரீனலில் சுரக்கக் கூடிய, 'கார்டிசால்' எனப்படுபவையும், அதிகாலையில் குறைந்து காணப்படும்.
எனவே தான், பொதுவாக காலை நேரங்களில், ஆஸ்துமா தொந்தரவு அதிகமாக காணப்படுகிறது. இதற்கு, இரவு 10:00 மணியளவில் இன்ஹேலர்களும், 12 மணி நேரம் வரை வேலை செய்யக்கூடிய, 'பிராங்கோ டைலேட்டர்' மாத்திரைகளும் எடுத்துக் கொண்டால் இப்பிரச்னையில் இருந்து, ஆஸ்துமா நோயாளிகள் தங்களை பாதுகாக்க இயலும்.
நாங்கள் வசிக்கும் கிராமத்தில், என் அம்மாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அருகில் உள்ள டாக்டரிடம் சென்றபோது, அவர், 'டிரிப்' ஏற்றினார். அப்போது இளைப்பு வந்தது ஏன்?
உடலில் வாந்தி, பேதி ஏற்பட்டு, நீர்ச்சத்து குறைந்தால் தான், ரத்தக்குழாய் வழியே, உடனே உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை கொடுக்க வேண்டும். பிற உடல் உபாதைகளிலும், உடல் சோர்வுற்று இருக்கும்போதும், நாம், வாய் வழியாகவே உடலுக்குத் தேவையான அளவு நீர்ச்சத்தை எடுத்துக் கொள்ளலாம். அதை விடுத்து, தேவையில்லாத சமயங்களில் கூட நாம், டிரிப் தந்தோம் என்றால், அது, இதயம், நுரையீரல் போன்ற இடங்களுக்குச் சென்று, தேங்கிக் கொள்ளும். இதனால் நுரையீரலில், 'பல்மோனரி எடிமா' போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, மூச்சுத் திணறலை உண்டாக்குகிறது. எனவே டிரிப் செய்யும் முன் நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டும். அத்துடன் டிரிப்பில் பெரிய சத்துக்கள் எதுவும் இல்லை. அவை, நாம் இழந்த நீரை மட்டும் தான், நம் உடல் பெற உதவியாக இருக்கும்.
அத்துடன் பெரிய மருத்துவமனைகளிலும் கூட, இதை அவ்வளவு எளிதாக உபயோகித்து விடுவதில்லை. ஒவ்வொரு தனிப்பட்ட நோயாளியின் உடல் எடை மற்றும் அவரது தேவைக்கேற்ப, ஒரு மணிநேரத்தில் இருந்து, ஒரு நாளைக்குள் எவ்வளவு அளவு கொடுக்க வேண்டும் என்பதை மிகத் துல்லியமாக கணித்த பின்பே, டிரிப் செலுத்துகின்றனர். ஆதலால் டிரிப் செலுத்துவதில் மிக அதிக கவனம் தேவை.
நுரையீரல் பிரச்னைக்காக, டாக்டரிடம் ஆலோசனை பெற்றேன். அவர் மருந்து, மாத்திரைகளுடன், 3 பந்துகள் உள்ள சிறிய கருவி ஒன்றையும் கொடுத்து, தினமும் பயிற்சி செய்யச் சொன்னார். இது அவசியம் தானா?
டூவீலர்களில் பெட்ரோல் டாங்கில், ரிசர்வ் வைத்து நாம் உபயோகிப்பது போலவே, நம் நுரையீரலில் இன்ஸ்பிரேட்டரி ரிசர்வ் வால்யூம் மற்றும் எக்ஸ்பிரேட்டரி ரிசர்வ் வால்யூம் என்ற 2 ரிசர்வ் அளவுகள் உள்ளன. இவை இரண்டும், நுரையீரலின் செயல்திறன் சிறப்பாக இருக்க உதவும். தினமும் நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்ற, உடலுக்கான சில பயிற்சிகளை செய்யும்போது, இவற்றை மேம்படுத்தலாம். ஆனால் இவற்றையெல்லாம் செய்ய முடியாத நுரையீரல் தொந்தரவு உள்ள வயதானவர்கள் மற்றும் படுக்கையில் இருக்கும் நோயாளிகளுக்கு, டாக்டர் உங்களுக்குத் தந்த கருவி, நுரையீரலின் செயல் திறனை அதிகரிக்க, பெரிதும் உதவும்.
மேலும், நடந்தாலே அதிகமாக மூச்சு வாங்குவோருக்கும், இக்கருவி பரிந்துரைக்கப்படுகிறது. மாத்திரை மருந்துகளுடன், இக்கருவியில் தொடர்ந்து பயிற்சி செய்யும்போது, நுரையீரலின் செயல்திறன் அதிகரிக்கும். எனவே, பிரச்னையில் இருந்து எளிதில் குணமடையலாம்.
டாக்டர் எம். பழனியப்பன்,
மதுரை.

