இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றினால் கவனமா இருங்க!
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றினால் கவனமா இருங்க!
PUBLISHED ON : ஜூன் 22, 2025

இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுவதும், சிறிது நேரம் கூட சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதும், சிறுநீர செயல் இழப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.
பொதுவாக, முதுமையில் சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, அதன் செயல்பாடுகளும் குறையும். இதுபோன்ற சமயத்தில், சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல் பருமன், போன்ற பிரச்னைகள் கட்டுப்பாடின்றி இருப்பின், பெரிய பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
இதுகுறித்து, சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பிரபாகரன் கூறியதாவது:
முதுமை வயதை எட்டிய பின்னரே, பலர் ஆரோக்கியத்தை கண்டுகொள்ளவில்லையே என வேதனைப்படுகின்றனர். சிறுநீரக செயல் இழப்பு என்பது, இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை வராமல் இருப்பது நல்லது. வந்துவிட்டால், எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் கவனம் வேண்டும். வயதாகும் போது சிறுநீரகத்தின் செயல்திறன் குறையும்.
ஆண்களுக்கு 50 வயதுக்கு மேல், சிறுநீரக நீர்ப்பையில் சதை வளர்ச்சி ஏற்பட்டு, சிறுநீர் செல்லும் பாதையை அடைத்து விடுகிறது.
ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தினால் சரிசெய்து விடலாம்; இறுதியில் சிறுநீர் வராமல், வேறு சில நோய்கள் உண்டாக காரணமாக அமைந்துவிடும்.
அறுவைசிகிச்சை செய்தே சரிசெய்ய வேண்டும். இப்பாதிப்பு இருப்பின், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் வேகம் குறைவது, பாத்ரூம் செல்லும் வரை கூட, கட்டுப்படுத்த முடியாமல் இருப்பது அறிகுறி.
சிறுநீரகத்தை பொறுத்தவரையில், 85 சதவீதம் பாதிப்பு ஏற்பட்ட பின்னர் தான், பிரச்னைகளை உண்டாக்கும். உறுப்புகள் அனைத்தும் ஒன்றொடு ஒன்று, தொடர்புடையது. ஒன்று பாதித்தால் தொடர்ந்து பல பாதிப்புகளை உருவாக்கும்.
சிறுநீரக தொற்று
யூரினரி தொற்று என்பதை இரண்டாக பிரிக்கலாம். சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீரக பிளாடர் தொற்று. சிறுநீரக தொற்று உயிரிழப்பு வரை ஏற்படுத்தி விடும். இதற்கு, விலாஎலும்பு வலி, குளிர்காய்ச்சல், ஆக்சிஜன் குறைவது போன்ற அறிகுறிகள் தென்படும். அவ்வாறு, இருப்பின் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். யூரினரி தொற்று என்றால் அடிக்கடி சிறுநீர் கழித்தல், எரிச்சல் போன்று இருக்கும். பொதுவாக, சர்க்கரை, ரத்த அழுத்தம்,கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் அதற்கான சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மட்டுமே மேற்கொள்கின்றனர். இப்பிரச்னைகள் இருப்பின், ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது டாக்டர் கூறுவது போலோ இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது. எதை தொலைத்தாலும் கிடைக்கும்; ஆரோக்கியம் தொலைந்தபின்னரே எது முக்கியம் என்பதை உணர்கின்றோம்.
மீண்டும் தோன்றும் சிறுநீரக கல்
''சிறுநீரக கல் என்பது பெரிய தொந்தரவு இல்லாமல் இருக்கும். நிறைய தண்ணீர் குடித்தால் கரைந்துவிடும், வாழைத்தண்டு சாப்பிட்டால் கரைந்துவிடும் என சிக்கலை ஏற்படுத்திக்கொள்கின்றனர். இளம் வயதில் ஒருவருக்கு சிறுநீரக கல் ஏற்பட்டால், அவரது வாழ்நாளில் 40 முதல் 60 கல்கள் மீண்டும் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. இதனால், அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்,'' என்கிறார் டாக்டர் பிரபாகரன்.