PUBLISHED ON : மார் 01, 2015

உடலிலுள்ள உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். இதனை உலகிலுள்ள மிகச்சிறந்த சுத்திகரிப்பு உபகரணம் என்று தான், சொல்ல வேண்டும். மனிதன் உயிர் வாழ இன்றியமையாத அங்கங்களில், சிறு நீரகமும் ஒன்று. இது மிகச் சிறிய உறுப்பாக இருந்தாலும், அதன் பணிகள் வியக்கத்தக்கவை. ஒவ்வொரு மனிதனுக்கும் இரு சிறுநீரகங்கள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் இருபுறமும், விலா எலும்புக்கு கீழே பின்புறத்தில் இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ளது. ஒவ்வொரு சிறுநீரகமும், 10.5 முதல் 11.5 செ.மீ. வரை நீளமும், 4.5 முதல் 5.5 செ.மீ. வரை பருமனும் கொண்டது. அவரை விதை அளவு வடிவில்தான் சிறுநீரகம் இருக்கும்.
ஆனால் அதன் செயல்பாடோ, மிக உயர்ந்தது. நம் உடலில் உருவாகும் கழிவுகளை அகற்றும் முக்கிய பணியை, சிறுநீரகம் கவனிக்கிறது. அத்துடன் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பது, எலும்புகளை உறுதிப்படுத்துவது, ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டுவது, உடலின் நீர்- அமிலப் பொருள்களின் அளவை சீரான அளவில் கட்டுப்படுத்துவது போன்றவை, சிறுநீரகத்தின் பணிகளாகும். நாம் உண்ணும் உணவு, ஜீரண உறுப்புகளால் சத்தாக மாற்றப்பட்டு,
ரத்தத்தில் கலந்து, உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இதே போல் உடல் உறுப்புகள் வெளியேற்றும் கழிவுகளும், ரத்தத்தில் கலந்து சிறு நீரகங்களுக்கு வருகிறது. ரத்தத்தில் கலந்து வரும் கழிவுகளான யூரியா, கிரியாட்டினன் போன்றவற்றை சிறு நீரகங்கள் பிரித்து சிறுநீராக வெளியேற்றுகிறது. சிறுநீரகங்கள் செயல் இழப்பு ஏற்பட்டு கழிவுகள் வெளியேறாமல் தங்கிவிடும் போதுதான் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது.
சிறுநீரகங்கள் ஏன் பாதிக்கப்படுகிறது?
முக்கியமாக ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை சரியாக கவனிக்காமல் விட்டு விடுவதால் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். சோடியம், பொட்டாசியம், அம்மோனியா போன்ற தாதுப் பொருட்களின் அளவை சரிவிகிதத்தில் தருவது என, பல்வேறு பணிகளை சிறுநீரகம் சிறப்பாக செய்து வருகிறது. சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக ரத்தக் குழாய்களில் அடைப்பு என்பன போன்ற காரணங்களால் ரத்தக் கொதிப்பு உண்டாகிறது என்பது எவ்வளவு உண்மையோ அது போன்றே அதிக ரத்தக் கொதிப்பினால் சிறுநீரக செயலிழப்பும் ஏற்படுகிறது.

