PUBLISHED ON : அக் 18, 2015
கற்றாழையில் பல வகைகள் உண்டு. அவை எல்லாம் மருந்து பொருளாக பயன்படுவதில்லை. ஆனால், சோற்றுக்கற்றாழை மட்டும் மிக சரியான மருந்தாக பயன்படுகிறது. சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கு, சோற்றுக்கற்றாழை மருந்தாகிறது.
காடு, மேடுகளில் மிக எளிதாக கிடைக்கும் சோற்றுக்கற்றாழையை பறித்து, சிறு துண்டுகளாக நறுக்கி, அதன் தோல் பகுதியை நீக்கி விட்டு, உள்ளே இருக்கும் சோற்றுப்பகுதியை பச்சையாக விழுங்கினால், வயிற்று எரிச்சல், அல்சர் தொல்லை, உடல் சூடு நீங்கும்.
வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு நோய் வந்தால், சோற்றுக்கற்றாழை மருந்தாக பயன்படுகிறது. கற்றாழை மடலில் சிறு துண்டு எடுத்து, அதை இரண்டாக பிளந்து, சோற்றுப் பகுதியை நெருப்பில் வாட்டி உடல் தாங்கும் வெப்பத்தில், அடிபட்ட இடத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி, வீக்கம் மட்டுமல்ல, ரத்தக் கட்டும் குணமாகும்.
கற்றாழையின் பிசின் போன்ற சோற்றை, தலையில் தேய்த்து, 30 நிமிடம் ஊற வைத்துக் குளித்தால் தலையில் ஏற்படும் பொடுகு, சிரங்கு மற்றும் துர்நாற்றம் முதலியவை நீங்கும். சோற்றுக் கற்றாழையை இரண்டாகப் பிளந்து உள்ளே கொஞ்சம் வெந்தயத்தை வைத்து மூடி விடவும்.
இரண்டு நாட்கள் கழித்து, அந்த வெந்தயத்தை எடுத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, அதை தேய்த்து குளித்து வந்தால் வெள்ளை முடிகள் கருமையாகும். காய்ந்த கற்றாழையை நெருப்பில் கருக்கி, அதை தேங்காய் எண்ணெயோடு கலந்து தீப்புண்கள் மீது பூசி வந்தால், விரைவில் புண் குணமடையும்.
குடல் புண், மூல நோய்க்கு கற்றாழை நல்ல மருந்து. மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு இந்த செடியின் மடலில் உள்ள சோற்றை எடுத்து, தண்ணீரில் நன்கு அலசி அதை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனளிக்கும்.

