PUBLISHED ON : டிச 12, 2010

நம் நாவில் பட்டவுடன், முதலில் எந்த உணர்ச்சியை நாவிற்கும், மூளைக்கும் உணர்த்துகிறதோ, அந்த உணர்வே நாம் உட்கொள்ளும் பண்டத்தின் சுவையாகும். இவை நாவிற்கு ருசியை தருவதுடன், உண்பதற்கு இனிமையையும், மனதிற்கு மகிழ்ச்சியும், உடலுக்கு ஊட்டத்தையும், நுண்கிருமிகளுக்கு எதிர்ப்பையும் தருபவையே. கசப்பு சுவை, ஜீரணத்தை அதிகப்படுத்தி, உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் நுண்கிருமிகளை வெளியேற்றி, உடல் எரிச்சலை தணித்து, அதிகரித்த ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. அது மட்டுமின்றி, சளி, அஜீரணம் போன்ற நாட்பட்ட தொல்லைகளை நீக்குவதுடன், வாய் மற்றும் உணவுப்பாதைகளிலுள்ள அழுக்குகளையும் கழிவாக வெளியேற்றும் தன்மை உடையன. இதுபோன்ற கசப்பு தன்மையுடைய, மருந்தாக பயன்படும் உணவு தான் 'அதலைக்காய்!'
'மொமார்டிகா டியுபரோசா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட 'குக்கர்பிட்டேசியே' குடும்பத்தை சார்ந்த அதலைக்காயில் கசப்பான கிளைக்கோசைடுகள், மொமார்டிக்கோசைடுகள், இன்சுலினுக்கு இணையான பண்புரதங்கள் பெருமளவு காணப்படுகின்றன.
துவரம்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து, குழைய வேகவைத்து கொள்ள வேண்டும். அத்துடன் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிய அதலைக்காய் - 10 கலந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், பூண்டு - 1 பல், தக்காளி - 2,
சிறிய வெங்காயம் - 5 அனைத்தையும் மைய நசுக்கி, சட்டியில் தேவையான நீர் சேர்த்து நன்கு வேக வைத்து, அத்துடன் பருப்பு மற்றும் 'அதலைக்காய்' கலவையை கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து, இறுதியில் சோம்பு, லவங்கப்பட்டை மற்றும் கறிவேப்பிலையை தாளித்து போட்டு, இறக்கி வைத்து கொள்ள வேண்டும்.
வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதை குடித்து வர வயிற்றில் நுண்புழுக்கள், குடற்கிருமிகள் ஆகியன நீங்கும். சர்க்கரை அளவு மற்றும் கொழுப்புச்சத்து குறையும். நாட்பட்ட புண்கள் ஆறும்.
கேள்வி - பதில்:
சங்கரபார்வதி, திருநெல்வேலி: எனக்கு குளிர் காலங்கள் மற்றும் தண்ணீரில் நின்று வேலை செய்தால், கெண்டைக்காலில் சதைப்பிடிப்பு மற்றும் பெருவிரல்கள் இழுத்து கொள்கின்றன. இது கடுங்குளிரினால் ஏற்படுகிறதா அல்லது சத்து பற்றாக்குறையா?
சுண்ணாம்பு, பாஸ்பரஸ் சத்து பற்றாக்குறையினாலும், ரத்த ஓட்டம் குறைவதினாலும் இதுபோன்ற தொல்லைகள் ஏற்படலாம். இதை கட்டுப்படுத்த சுண்ணாம்பு சத்து நிறைந்த சங்கு பற்பம், பலகரை பற்பம், பவள பற்பம், பேரண்ட பற்பம், அண்டயோடு பற்பம் ஆகியவற்றை, 100 முதல் 200 மில்லி கிராமளவு பாலுடன் கலந்து, தினமும் ஒன்று அல்லது இரண்டு வேளை உட்கொள்ளலாம். அடிக்கடி நீர் அருந்துவதுடன், கற்பூராதி தைலம், காயத்திருமேனி தைலம் போன்றவற்றை கால்களில் தடவி வரலாம்.
- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை.
நீங்கள் 'தமோகுணம்' கொண்டவரா... படியுங்கள் இதை!
சிலர் சில வேளைகளை பொறுமையாக, மந்தமாக செய்வதால் அவர்களை எருமை போல என்று கேலி செய்வதுண்டு. இந்த குணத்தை தமோகுணம் அல்லது தாமசகுணம் என, சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. பெரும்பாலான கொழுப்பு சத்துள்ள உணவுகள், தமோகுணத்தை பெற்றிருக்கின்றன. இவை, உடனே செலவழிக்கப்படாமல் நம் உடலில் சேமித்து வைக்க வாய்ப்பிருப்பதால், குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.
புழுங்கல் அரிசி, வரகு, மொச்சை, சோளம், பட்டாணி போன்ற தானியங்களும், எருமை பால், தயிர், நெய், வெண்ணெய், முத்தலான காய்கள், உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு, பெரிய வெங்காயம், வெந்தப்பூண்டு, கஞ்சா, அபினி, சாராயம் போன்ற போதைப்பொருட்கள், முட்டை மற்றும் பலவகையான மாமிசங்களும் தமோ குணத்தை சார்ந்தவை. ஆகவே, இவற்றை உணவில் குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.
மந்த குணமுடையவர்கள் அதற்கு மாற்றாக பச்சைப்பயிறு, அவல், சீரகம், ஏலக்காய், மிளகு, மஞ்சள், தேன், பசும்பால், நீர்க்காய்களான சுரை, பூசணி, புடலை, பீர்க்கு, பரங்கி, முள்ளங்கி, சௌசௌ, சுண்டை, வாழை, பொன்னாங்கண்ணி, மிளகுதக்காளி, மா, கொய்யா, இளநீர் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.