PUBLISHED ON : செப் 16, 2015
கால்சியம் என்ற தனிமம், அனைத்து உயிர்களின், உடல் செயல்பாட்டுக்கும் அவசியம். உடலின் தசைகள், சுருங்கி விரியவும், இதயத்தின் துடிப்புக்கும் கால்சியத்தின் உதவி தேவை.
செல்களுக்கு இடையே, வேதி சமிக்கைகள் சரிவர செல்ல, கால்சியம் வேண்டும். அதுமட்டுமல்லாமல், உண்ணும் உணவினை, ரசிக்க, ருசிக்க மற்றும் கரைவதற்கு, தேவையான எச்சிலை சுரக்க உதவி செய்கிறது.
பொதுவாக, 30 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், எலும்பிலுள்ள கால்சியம் மெதுவாக, குறைய ஆரம்பிக்கும். ஏனெனில், நம்முடைய எலும்பு வளர்ச்சி, அத்துடன் நின்று விடும். ஆகையால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க, தொடர்ந்து உடலுக்கு வேண்டிய, கால்சியத்தை தந்து கொண்டே இருக்க வேண்டும்.
நாம் உண்ணும் உணவில், கால்சியம் சத்து குறைவாகவே உள்ளது. இது தொடர்ந்து நிகழ்ந்தால், எலும்பிலுள்ள கால்சியம் குறைவதால், அரிமானம் ஏற்பட்டு, எலும்பின் உறுதி குறையும். இந்நிலை, குழந்தை பருவத்தில் ஏற்பட்டால், எலும்பு வலுவின்றி வளைந்து, ரிக்கெட்ஸ் என்ற பாதிப்பு வரும்.
நமக்கு தினமும் சுமார், 400 முதல் 500 மில்லி கிராம் வரையிலான கால்சியமானது, வியர்வை, சிறுநீர் மற்றும் மலத்தின் வழியே வெளியேறுவதால், உடலின் கால்சியம் அளவு தினமும் குறைகிறது.
கால்சியமானது, பெருங்குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. எடை சீராக இருக்க உதவுகிறது. பெண்களுக்கு முதுகுவலி வராமல் பாதுகாக்கிறது. கால்சியத்தின் அளவு குறைந்தால், பல் ஆடுவதோடு, பற்களுக்கிடையே இடைவெளி ஏற்படும். பாக்டீரியாவானது எளிதில் பற்களை தாக்கி, பற்சிதைவு, வீக்கம் மற்றும் ரத்தம் வடிதல் ஏற்படுகிறது.
மாதவிடாய் சமயத்தில், தினம் ஒரு கிராம் அளவுக்கு, கால்சியம் சத்துள்ள உணவை எடுத்துக் கொண்டால், மாதவிடாயின் தொந்தரவு இருக்காது. வயிற்று வலியை துரத்தும்.

